விஜய் முதலமைச்சரா? காலண்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. விஜய்யை வைத்து சக்கை லாபம் பார்க்கறாங்களேப்பா
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட்டார். இவருக்கு இவரது ரசிகர்கள் தொடங்கி, இளைஞர்கள், இளம்பெண்கள், பொதுமக்கள் என பரவலாக வரவேற்பு கிடைத்தது. விஜய் அரசியலில் களமிறங்கியதிலிருந்து சிலர் விஜய்யை வியாபார பொருளாக மாற்றி சக்கை லாபம் பார்த்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தான் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகி, முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற காலண்டர் உருவாக்கி வியாபாரம் செய்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நடிகர் என்பதால் பொதுவாகவே அவரது படங்கள் வெளியாகும் போது, அந்த படத்தில் அவருடைய மெயின் காஸ்ட்யூம் ,அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்கள், பயன்படுத்தும் பொருட்கள் என பலவும் அதிக அளவில் வியாபாரமாகும். அதற்கு காரணம் விஜயின் தீவிர ரசிகர்கள் தனது அபிமான நடிகர் இப்படியான பொருட்களை பயன்படுத்துகிறார், இந்த ஆடையை தான் அணிந்து உள்ளார், இந்த ஆபரணத்தை தான் அணிந்துள்ளார், எனவே நானும் அது போலவே அணிய வேண்டும், நானும் அதனை வாங்க வேண்டும், அதை வாங்கி, அணிந்து கொண்டு தான், நான் படம் பார்க்க போவேன் என்ற மனநிலையில் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இதனை கடந்த காலங்களில் நாம் பார்த்துள்ளோம்.

வியாபாரப் பொருளாக விஜய்: இப்படி இருக்கையில், விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கி, தமிழ்நாடு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய்யின் கட்சிக்கொடி, விஜய்யின் கட்சியின் சொந்தமான விசில் சின்னம், விஜய் தனது பிரச்சாரத்தின் போது அணிந்திருந்த வெள்ளை நிற சட்டை, வெளிர் காக்கி நிற பேண்ட் போன்றவை அதிக விலைக்கு தமிழ்நாடு முழுவதும் பலர் விற்பனை செய்தனர். ஒரு சிலரெல்லாம் இணையத்தில் குறிப்பாக சமூக வலைதள பக்கங்களில் டி வி கே காம்போ செட் என்றெல்லாம் கூறி தவெக கொடி, வெள்ளை நிற சட்டை வெளிர் காக்கி நிற பேண்ட், விசில் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்தனர். மேலும் சிலர் தவெக தரப்பில் விஜய் மற்றும் அவரது பிரச்சார புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டால், அதை போட்டோக்களை பிரேம் ஆக மாற்றி விற்பனை செய்து வந்தனர். அதனையும் மக்கள் குறிப்பாக விஜய் ரசிகர்கள் வாங்கி வந்தனர்.
சக்கை லாபம்: இப்படி இருக்கையில், இதன் அடுத்த கட்ட நகர்வாக விஜய் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிவிட்டார் என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து கோப்புகளை சரி பார்த்துக் கொண்டிருப்பது போன்ற, ஒரு புகைப்படத்தை வைத்து காலண்டர் உருவாக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பான விளம்பரங்கள் வீடியோக்கள் சமூக வளர்ந்தகங்களில் அதிகம் பார்க்க முடிகிறது. அதில் ஒரு வீடியோவை இணைய வாசி ஒருவர் பகிர்ந்து "முதலமைச்சர் காலண்டரை அடிச்சிட்டாங்க, இன்ஸ்டால் நல்ல வியாபாரம் பார்க்கிறாங்க, விஜய்யை ஒரு வியாபார பொருளாக வைத்து சக்கை லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
விஜய் தலையிடுவாரா?: தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே விஜய் முதலமைச்சராக அமர்ந்திருப்பது தொடர்பான புகைப்படத்தை வைத்து காலண்டர் உருவாக்கி இருந்தாலும், அது தமிழக வெற்றி கழகத்தின் நோக்கமும் கூட என்றாலும், அதை அதிக விலைக்கு விற்று சக்கை லாபம் பார்த்து வருவது என்பது விஜய் ரசிகர்கள், விஜய் மீது வைத்திருக்கும் பிரியத்தை வியாபாரப் பொருளாக மாற்றி லாபம் பார்த்து வருகின்றனர் என பலரும் விமர்சித்து வருகின்றனர். கட்சியின் சார்பில் இது போல காலண்டர் உருவாக்கப்பட்டிருந்தால் பொருப்பாளர்கள் பெயர் இருந்திருக்கும், ஆனால் இது தனி நபர்கள் வியாபார நோக்கத்தில் உருவாக்கி உள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக வெற்றிக்கழகமுமோ, விஜய்யோ தலையிட்டு அல்லது பொதுவான ஒரு அறிக்கை வெளியிட்டு நிறுத்தச் சொல்ல வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications