Vijay - நன்றி எல்லாம் மறக்கவில்லை.. சித்திக் குடும்பத்திடம் வருத்தம் தெரிவித்த விஜய்?
சென்னை: Vijay (விஜய்) இயக்குநர் சித்திக் குடும்பத்தை தொடர்புகொண்டு விஜய் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மலையாளத்தில் முன்னணி இயக்குநராக இருந்த சித்திக் தமிழில் 2001ஆம் ஆண்டு ஃப்ரெண்ட்ஸ் படத்தை இயக்கினார். விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா, தேவயானி, சார்லி, ராதாரவி, மதன் பாப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்தப் படத்தின் காமெடி காட்சிகள் காலத்தால் அழியாதவை. வடிவேலுவின் கரியரில் ரொம்பவே முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் கரியரிலும் அது முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருந்தது.

உயிரிழந்த சித்திக்: மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படங்களை இயக்கிய அவர் கடைசியாக மோகன் லாலை வைத்து பிக் பிரதர் படத்தை இயக்கினார். அதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நிமோனியா மற்றும் கல்லீரல் பாதிப்பைத் தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டதால் கொச்சி அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.
பிரபலங்கள் இரங்கல்: அவரது மறைவுக்கு மலையாள திரையுலகம் மட்டுமின்றி தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். சூர்யாகூட சித்திக்கிற்காக நீண்ட இரங்கல் பதிவை வெளியிட்டிருந்தார். இந்தச் சூழலில் நடிகர் சூர்யா சித்திக் வீட்டுக்கு நேராக சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

மறந்துபோன விஜய்?: சூர்யா சித்திக் வீட்டுக்கு சென்றதை அடுத்து விஜய் ஏன் செல்லவில்லை என்ற கேள்வியை பலரும் எழுப்பினர். அதுமட்டுமின்றி நேரில் செல்ல வேண்டாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல்கூடவா சொல்ல முடியாது. தனது கரியரில் இரண்டு முக்கியமான படங்களை கொடுத்த இயக்குநர் என்ற நன்றியை விஜய் மறந்துவிட்டார் என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.
வருத்தம் தெரிவித்த விஜய்?: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி வெளிநாட்டில் இருக்கும் விஜய் சித்திக் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு சித்திக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும்; வெளிநாட்டில் இருந்ததனால்தான் அஞ்சலி செலுத்த நேரில் வர முடியவில்லை என அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்டவுடன் விஜய் ரசிகர்கள் எங்கள் தளபதி எப்போதும் நன்றி மறந்தவரில்லை என்பதை நிரூபித்துவிட்டார். அவர் மீது வேண்டுமென்றே பலரும் அவதூறு பரப்புகிறார்கள் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











