ஆர்வக்கோளாறில் ஓடி வந்து காலைப் பிடித்த ரசிகர்: கீழே விழுந்த விஜய்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர் ஒருவர் ஓடி வந்து காலைப் பிடித்ததால் விஜய் தேவரகொண்டா கீழே விழுந்தார்.
விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ள டியர் காம்ரேட் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் நல்லவிதமாக கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா மேடையில் நின்று ரசிகர்களை பார்த்து பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு ரசிகர் விஜய்யை தொட்டுப் பார்க்கும் ஆசையில் மேடைக்கு ஓடி வந்தார்.
ரசிகர் ஓடி வந்து விஜய்யின் கால்களை பிடித்துக் கொண்டார். இதில் விஜய் நிலை தடுமாறி மேடையில் விழுந்துவிட்டார். உடனே அங்கிருந்தவர்கள் வந்து விஜய்யை தூக்கிவிட்டனர். ரசிகரின் செயலால் விஜய் தேவரகொண்டா கோபம் அடையவில்லை.
மாறாக மைக்கை வாங்கி நீங்கள் என் மீது பாசம் காட்டுகிறீர்களா, தாக்குகிறீர்களா என்று மட்டும் சிரித்துக் கொண்டே கேட்டார். டியர் காம்ரேட் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் வாங்கியுள்ளார்.
இந்தி ரீமேக்கில் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டாரும், ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரும் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. இது குறித்து அறிந்த கரண் ஜோஹாரோ, இஷான்-ஜான்வி நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படம் இந்தியில் ஷாஹித் கபூரை வைத்து கபிர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ரூ. 260 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில் அவரின் அடுத்த பட ரீமேக்கில் யார் நடிக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











