அவதார் காப்பியா?.. ஷீ வெப்சீரிஸ் காப்பியா?.. விஜய் தேவரகொண்டா ’கிங்டம்’ டிரைலரை வெளுக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: கெளதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள கிங்டம் திரைப்படம் வரும் ஜூலை 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி 10க்கும் மேற்பட்ட படங்கள் வரிசைக் கட்டி வெளியாகின்றன. அது தனிக்கதை. நேற்று மாலை வெளியான கிங்டம் படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் பிரமிப்பாக இருக்கு என பாராட்டி வரும் நிலையில், படத்தின் கதையை பார்த்தால் அவதார் பட காப்பி மாதிரி இருக்கே என ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.
2011ம் ஆண்டு வெளியான நுவிலே படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானவர் தான் விஜய் தேவரகொண்டா. லைஃப் இஸ் பியூட்டிஃபுல், எவடே சுப்ரமணியம், பெலி சூப்புலு, துவாரகா என 5 ஆண்டுகள் அவர் நடித்த படங்கள் பெரிதாக வரவேற்பை பெற்றவில்லை.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்குநராக அறிமுகமான அர்ஜுன் ரெட்டி படம் 2017ம் ஆண்டு வெளியான நிலையில், அந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
ராஷ்மிகாவுடன் ரகசிய காதல்: அந்த படத்தைத் தொடர்ந்து சாவித்ரியின் பயோபிக் படமான மகாநடி (நடிகையர் திலகம்) படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். ராஷ்மிகா மந்தனாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால், அதற்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக அவருக்கு கை கொடுக்கவில்லை. ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாக ஏகப்பட்ட தகவல்கள் பரவி வருகின்றன. இருவரும் மறைமுகமாக காதலை உறுதி செய்து வந்தாலும், ஓபனாக சொல்லவில்லை.
கிங்டம் டிரைலர் எப்படி இருக்கு?: அண்டர்கவர் போலீசாக ஒரு காட்டுக் கும்பலை பிடிக்க போகும் விஜய் தேவரகொண்டா அந்த கும்பலுக்கே தலைவனாகும் கதையையே கிங்டம் படத்தின் கதை என டிரைலர் காட்டுகிறது. இந்த படத்துக்காக உடல் எடையை அதிகரித்து மொட்டையடித்து ரொம்பவே உழைப்பைக் கொட்டி விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். கேஜிஎஃப் பாணியில் படம் உருவாகி உள்ளது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.

அவதார் காப்பி: கிங்டம் படத்தின் டிரைலரை பார்த்து விஜய் தேவரகொண்டாவையும் அனிருத்தின் பிஜிஎம்மையும் பலரும் பாராட்டி வரும் நிலையில், சில நெட்டிசன்கள் இது அவதார் படம் மாதிரி இருக்கே என கலாய்த்து வருகின்றனர். வேற்றுகிரக ஆதிவாசி மனிதர்கள் போல ராணுவ வீரர் ஒருவரை உள்ளே அனுப்ப, அவர் அந்த மக்களின் வலியை புரிந்துக் கொண்டு அவர்களுக்காக போராடி, அவர்களின் தலைவனாக மாறுவது தான் அவதார் படத்தின் கதை. அதே போல இருக்கிறதே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஷீ வெப்சீரிஸ் கதையும் இதுதான்: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்டார் படத்தில் நடித்த அதிதி போஹங்கர் கான்ஸ்டபிளாக இருந்து போதைப் பொருள் கடத்தும் தலைவன் நாயக்கின் நெட்வொர்க்கை கண்டு பிடிக்க சென்று நாயக்கை கொன்று விட்டு அந்த இடத்துக்கே இவர் தலைவி ஆவது போல வெப்சீரிஸை முடித்திருப்பார்கள். உலகம் முழுவதும் இதே கதையில் பல படங்கள் வந்துள்ள நிலையில், திரைக்கதையாக கிங்டம் படம் ரசிகர்களை மிரட்டினால் தான் வெற்றி பெறும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











