சிங்கம் பாதி..புலி பாதி..இரண்டு சேர்ந்த “லைகர்“ அட்டகாசமான டீசர் ரிலீஸ் !
சென்னை : நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'லைகர்' திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது.
பெண்களின் கனவு நாயகனான விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து ராஷ்மிகாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மனதில் இடம் பிடித்து இந்திய அளவில் பிரபலமானார்.
இதையடுத்து மகாநதி, நோட்டா என இரு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழிலும் முன்னணி நாயகனாக கருதப்பட்டார். அர்ஜுன் ரெட்டி மற்றும் மகாநதி போன்ற படங்களில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

விஜய் தேவரகொண்டா
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் 'லைகர்'. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லைகர்
மும்பையில் குடிசை பகுதியில் வாழும் விஜய் தேவரகொண்டா சர்வதேச அளவில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்கிறார். ஒரு சாதாரண இடத்தில் இருந்து இந்திய அளவில் எவ்வாறு உயர்ந்தார் என்பதை மாஸ், ஆக்ஷன் கலந்த மிரட்டலாக சொல்லியிருக்கும் கதை தான் லைகர். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

மிரட்டலான டிரைலர்
தற்போது வெளியாகி உள்ள டிரைலரில், ஒரு லயனுக்கும் டைகருக்கும் பொறந்தவன் இவன் என்று மிரட்டலாக ரம்யா கிருஷ்ணனின் குரலில் டிரைலர் தொடங்குகிறது. அடுத்து காலால் ஒரே ஒரு கிக்குவிட்டு அனைவரையும் அடித்து துவக்கிறார் விஜய் தேவரகொண்டா. அதுமட்டுமில்லாமல் ரம்யா கிருஷ்ணன் விஜய்தேவகொண்டாவை எட்டி உதைப்பதும், ஆடுவதும் என மிரட்டி இருக்கிறார். பாகுபலி படத்திற்கு பின்னர் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பு அதிகம் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ட்ரைலர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

மைக் டைசன்
இந்திய சினிமாவில் முதல் முறையாக இப்படத்தில் மைக் டைசன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு கவுரவ வேடம் என்றும், படத்தின் இறுதிக் கட்டத்தில் அவரது கதாபாத்திரத்தை வைத்தே முக்கியமான திருப்பம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி வெளியாகவுள்ளது. லைகர் படத்தின் இந்தி மற்றும் மலையாள டிரெய்லர்களை முறையே ரன்வீர் சிங் மற்றும் துல்கர் சல்மான் வெளியிட்டனர்.


Click it and Unblock the Notifications











