விஜய் தேவரகொண்டா முதல் நிதி அகர்வால் வரை.. 25 பேர் மீது அதிரடி வழக்கு.. ரேவந்த் ரெட்டி பாய்ச்சலா?
ஹைதராபாத்: தெலங்கானாவில் அல்லு அர்ஜுனுக்கு எதிராக கடந்த ஆண்டு ரேவந்த் ரெட்டி அரசு எடுத்த நடவடிக்கை பலருக்கு அதிர்ச்சியையும் பொதுமக்களிடம் வரவேற்பையும் பெற்றுத் தந்தது. புஷ்பா 2 படத்தை புரமோட் செய்யும் விதமாக திடீரென சந்தியா தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்த நிலையில், கூட்ட நெரிசலில் ரேவதி எனும் பெண் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அல்லு அர்ஜுனை ஒரு நாள் சிறையிலும் அடைத்தனர்.
அல்லு அர்ஜுன் சிறைக்குச் சென்றதும் அவரது வீட்டில் பல முன்னணி நடிகர்கள் துக்கம் விசாரிப்பதை போல வரிசைக் கட்டி சென்றனர். ஆனால், உயிரிழந்த அந்த ரேவதியின் வீட்டுக்கும் மூளைச்சாவு அடைந்த அவரது மகனை பற்றி ஒரு சினிமா பிரபலமாவது கவலைப்பட்டார்களா என ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், முன்னணி நடிகர்கள் உள்பட 25 பேர் மீது பெட்டிங் ஆப்களில் விளம்பரம் செய்த குற்றத்துக்காக FIR பதிவு செய்யப்பட்டு இருப்பது தெலங்கானாவில் பெரும் சலசலப்பை கிளப்பியுள்ளது.
பெட்டிங் ஆப்கள்: ரம்மி விளையாட்டுகள் போன்ற பல பெட்டிங் ஆப்கள் இளைஞர்களின் பணத்தை சூறையாடி அவர்களை தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டுகிறது. குடி போதை போல விரைவில் பணம் சம்பாதித்து விடலாம் என்கிற போதையை சில பெரிய நடிகர்களே காசுக்காக விளம்பரப்படுத்தி ரசிகர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் என ஹைதராபாத்தை சேர்ந்த பனிந்த்ரா ஷர்மா என்பவர் மார்ச் 19ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் FIR போடப்பட்டு விசாரணைக்காக அவர்களுக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா முதல் நிதி அகர்வால் வரை: பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால், லக்ஷ்மி மஞ்சு உள்ளிட்ட பிரபல நடிகர்கள் மீதும் அனன்யா நாகெல்லா, ஸ்ரீ ஹனுமந்து, ஸ்ரீமுகி, வர்ஷினி சவுந்தர்ராஜன், வசந்தி கிருஷ்ணன், ஷோபா ஷெட்டி, அம்ருதா சவுத்ரி, நயனி பவனி, நேகா பதான், பாண்டு, பத்மாவதி, இம்ரான் கான், விஷ்ணு பிரியா, ஹர்ஷா சாய், சயா சன்னி யாதவ், ஷியாமளா, டேஸ்டி தேஜா, ரிது சவுத்ரி, பந்தாரு சேஷாயணி, சுப்ரிதா உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சர்கள் என மொத்தம் 25 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இளைஞர்களை கெடுக்கும் இன்ஃப்ளூயன்சர்கள்: சோஷியல் மீடியா மூலம் பணம் சம்பாதிக்கும் இன்ஃப்ளூயன்சர்களுக்கும் சில நடிகர்களுக்கும் எவன் குடி கெட்டா எனக்கு என்ன என்பது போல சம்பாதிக்கும் மனநிலையுடன் பெட்டிங் ஆப்களை விளம்பரப்படுத்தி வருகின்றனர் என்றும் ஏகப்பட்ட இளைஞர்கள் கடனாளியாக மாறி வருகின்றனர் என்றும் சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளதாக பனிந்த்ரா ஷர்மா அளித்த புகாரின் பேரில் தீவிர நடவடிக்கையை முடுக்கி விட ரேவந்த் ரெட்டி அரசு தீர்மானித்துள்ளது என்கின்றனர்.
ரேவந்த் ரெட்டி vs டோலிவுட்: தெலுங்கு சினிமா மீது முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு ஏதாவது பகையா? என்கிற பேச்சுக்களும் கிளம்பியுள்ளன. ஆனால், பொது மக்களுக்கு நடிகர்கள் நல்லது செய்யாமல் தவறான வழிக்கு கொண்டு செல்லும் போது அதை தட்டிக் கேட்டால் பழி வாங்கும் நடவடிக்கை எடுக்கிறார் என எப்படி சொல்வது என்றும் பெரும் விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











