Vijay - வலுவாகும் விஜய்யின் அரசியல் அச்சாரம்?.. நிவாரண பொருட்களை எப்படி கொடுத்திருக்கார் பாருங்க.. செம மூவ்
நெல்லை: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு நடிகர் விஜய் தனது கைகளால் நிவாரண பொருட்களை வழங்கினார். முக்கியமாக யாரையும் எழ விடாமல் ஒவ்வொருவரிடமும் இவரே சென்று அந்த பொருட்களை கொடுத்தது வந்திருந்தவர்களை நெகிழ செய்தது.
விஜய் தற்போது தனது 68ஆவது படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், மைக் மோகன், பிரேம்ஜி அமரன், வைபவ், மீனாட்சி சௌதரி, சினேகா, லைலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி பிறகு தாய்லாந்தில் சில நாட்கள் ஷூட் செய்யப்பட்டது. அங்கு முக்கியமாக ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

துருக்கி டூ சென்னை: தாய்லாந்து ஷெட்யூலை முடித்துவிட்ட படக்குழு சென்னை திரும்பி குட்டி ரெஸ்ட் எடுத்தது. அதனையடுத்து அடுத்தக்கட்ட ஷெட்யூலுக்காக துருக்கியில் முகாமிட்டிருந்தது படக்குழு. அங்கு ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவந்த சூழலில் கேப்டன் விஜயகாந்த் நேற்று முன் தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனை கேள்விப்பட்ட விஜய் உடனடியாக ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு சென்னை வந்து விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு: இதற்கிடையே திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சில வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத மழை பெய்தது. இதன் காரணமாக இரண்டு மாவட்டத்தின் ஊர்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. எனவே மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர். பலர் வீடுகளை இழந்து தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டது.
நேராக வந்த விஜய்: இந்த நிவாரண பொருட்களை விஜய்யே நேரடியாக வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் சுமார் 1500 குடும்பங்கள் நெல்லை பாளையங்கோட்டையில் இருக்கும் ஒரு மண்டபத்துக்கு அழைத்து வந்தார்கள். விஜய் இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து சாலை வழியாக நிகழ்வு நடக்கும் அரங்குக்கு சென்றார். அவருக்கு மக்களும், ரசிகர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
நிவாரண பொருட்கள் வழங்கிய விஜய்: அரங்குக்குள் வந்த விஜய் அங்கு அமர்ந்திருவர்களிடம் தானே சென்று தனது கைகளால் அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். அப்போது சில பெண்கள் எழுந்திருக்க முயல அவர்களிடம் விஜய் நீங்கள் எழுந்திருக்க வேண்டாம் அமருங்கள் என்று சொல்லி அவரே நிவாரண பொருட்களை அவர்களின் அருகில் வைத்தார். அப்படியே அனைவரிடமும் செய்தார் அவர். இது வந்திருந்தவர்களை நெகிழ செய்தது.
வலுவாகும் அரசியல் அச்சாரம்: முன்னதாக விஜய்யின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்துமே அரசியல் நகர்வை உணர்த்துவதுபடியே இருப்பதாக பலரும் கூறினார்கள். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவ, மாணவிகளை அழைத்து அவர்களுக்கு ஊக்கத்தொகை அளித்தார்.
தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குகிறார். இந்த செயல்கள் மூலம் விஜய் தனது அரசியல் அச்சாரத்தை வலுவாக்கிக்கொண்டே செல்வதாக தெரிவிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். முக்கியமாக வேறு எந்த முன்னணி நடிகரும் நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு இதுபோன்று நிவாரண பொருட்களை வழங்கவில்லை. எனவே இதன் மூலம் தென் மாவட்டங்களில் தனது தடத்தை விஜய் அழுத்தமாக பதிவு செய்துவிட்டதாக சினிமா ஆர்வலர்களும், அரசியல் விமர்சகர்களும் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











