Vijay: ஒரே நாளில் டபுள் சிக்ஸர் அடித்த தளபதி.. மாநாடு பந்தக்கால்.. தளபதி 69 பூஜை.. வெற்றி தான்!
சென்னை: தளபதி 69 படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் கடந்த சில நாட்களாக வெளியாகி நேற்று மாலையுடன் முடிந்த நிலையில், இன்று சென்னையில் பிரம்மாண்டமாக தளபதி 69 படத்துக்கான பட பூஜை போடப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் கசிந்து டிரெண்டாகி வருகின்றன.
#Thalapathy69Pooja என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அக்டோபர் 4ம் தேதியான இன்று அதிகாலை மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் சினிமாவின் கடைசியையும் அரசியல் தொடக்கத்துக்கான நிகழ்ச்சியையும் நடத்தியிருக்கிறாரே தளபதி விஜய் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தளபதி 69 பட பூஜை: கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 69 படத்தின் பட பூஜை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக போடப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்து டிரெண்டாகி வருகின்றன. விரைவில் பட பூஜை வீடியோவை கேவிஎன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி 69 நடிகர்கள் அறிவிப்பு: கடந்த சில நாட்களாக தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணைந்து யாரெல்லாம் நடிக்கப் போகின்றனர் என்கிற அறிவிப்பை தொடர்ந்து கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. பாலிவுட் நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, கெளதம் வாசுதேவ் மேனன், நரேன் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் தளபதி 69 படத்தில் இணைந்துள்ளனர்.
அரசியல் மாநாடுக்கான பந்தக்கால்: நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்றும் பெரியார் வழியை பின்பற்றுகிறார் என்றும் பஞ்சாயத்துக்கள் வெடித்து வந்த நிலையில், இன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் யாகம் எல்லாம் வளர்த்து புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நடைபெற்றது. வரும் அக்டோபர் 27ம் தேதி அங்கு தான் பிரம்மாண்டமாக விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு அஸ்த்தமனம் ஒரு உதயம்: ஒரே நாளில் நடிகர் விஜய்யின் சினிமா பயணம் அஸ்தமனாகவுள்ள கடைசி படத்துக்கான படப்பிடிப்பு மற்றும் உதயமாகவுள்ள அரசியல் மாநாட்டுக்கான பணிகளை விஜய் மேற்கொண்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஏகப்பட்ட கருத்துக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.
2 சிக்ஸர்கள்: அடுத்த ஒரு வருடத்தில் நடிகர் விஜய் அரசியலில் களம் கண்டு நிறைய வேலைகளில் நேரடியாக ஈடுபட வேண்டும். அதே போல அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தளபதி 69 படத்தை வெளியிட வேண்டிய நிலையில், அதற்கான படப்பிடிப்பு உள்ளிட்டவற்ற விஷயங்களில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். ஆனால், இரண்டிலுமே விஜய் சிக்சர் அடிக்க சரியான திட்டத்துடனே களமிறங்கியுள்ளார் என்றும் கோட் விஜய்க்கு வெற்றி நிச்சயம் என்றும் ரசிகர்கள் அவர் காலையிலேயே மோதிரத்தை காட்டிய புகைப்படத்தையும் ஷேர் செய்து #Thalapathy69Pooja ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். தளபதி 69 படத்தின் பூஜைக்காக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பிரபலங்கள் சென்னைக்கு வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சீக்கிரமே பூஜையில் விஜய் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











