அட முட்டாப்பயலே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா: அம்மாவிடம் திட்டு வாங்கிய விஜய் ரசிகர்
Recommended Video

பெங்களூரு: பெங்களூருவில் விஜய் ரசிகர் ஆர்வக்கோளாறில் ஒரு விஷயம் செய்ய முயன்று அம்மாவிடம் திட்டு வாங்கியுள்ளார்.
சர்கார் படத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அளித்த இலவச பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மறு தணிக்கை செய்து அந்த காட்சி நீக்கப்பட்டது.
அந்த காட்சியை நீக்கியது விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

தீ வைப்பு
சர்ச்சைக்குரிய காட்சியை தானே நீக்க முடியும் என்று கூறி விஜய் ரசிகர்கள் அரசியல் கட்சிகள் கொடுத்த இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, சைக்கிள், லேப்டாப் உள்ளிட்டவற்றை தீயில் போட்டு எரித்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சிலர் மிரட்டல் விடுக்கும் வீடியோக்கள் கூட வெளியாகியுள்ளது.

விஜய் ரசிகர்கள்
பெங்களூருவில் வசிக்கும் விஜய் ரசிகர் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் வீடியோக்களை பார்த்து தானும் மிக்சி, கிரைண்டரை எரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படி எரித்து வீடியோ வெளியிட்டால் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது போன்றாகும் என்பது அவர் நினைப்பு.

அம்மா
வீட்டில் உள்ள உஷா கிரைண்டரை எடுத்து எரிக்க முயன்றுள்ளார் அந்த ரசிகர். இதை பார்த்த அவரின் அம்மாவோ, என்னடா செய்கிறாய் என்று கேட்க, தம்பி அனைத்து விபரங்களையும் கூறியுள்ளார். அதை கேட்ட அவரின் தாயோ, அட முட்டாப்பயளே இது நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசில் வாங்கியது. நம் வீட்டில் இலவசங்கள் எதுவும் இல்லை என்று திட்டியுள்ளார்.

கர்நாடகா
உஷா கிரைண்டரின் நிறமும், தமிழகத்தில் அளிக்கப்பட்ட இலவச கிரைண்டரின் நிறம் போன்று இருந்ததால் அந்த ரசிகர் அதை எரிக்கப் பார்த்துள்ளார். அந்த ரசிகரோ கர்நாடகாவை சேர்ந்தவர். இருப்பினும் விஜய்க்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் எதையாவது எரிக்கத் துடித்துள்ளார். எதையும் எரித்து எதிர்ப்பையோ, ஆதரவையோ காட்ட வேண்டாம் என்று விஜய் அறிவுரை வழங்கினால் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











