விஜய்யை பெருமாள் பிச்சையாக்கிய ரசிகர்.. அந்த ஆள நம்பாதீங்கன்னு வெளியிட்ட போஸ்ட்.. என்ன ஆச்சு?
சென்னை: நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அறிவித்தார். அதுவரை விஜய் மக்கள் இயக்கமாக இருந்த அவரது ரசிகர் மன்றம், அதன் பின்னர் தமிழக வெற்றிக் கழகமாக மாறியது. மேலும் விஜய் சினிமாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஒரு பக்கம் வருத்தத்தை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில், விஜய் கட்சியில் உட்கட்சி மோதல் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக விஜய் ரசிகர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ள வீடியோ வேகமாக பரவி வருகின்றது.
விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து கட்சி விசயமாக வெளியே வந்தது என்றால், அது அவரது கட்சி மாநாட்டிற்காகத்தான். அதற்கு முன்னரும் பின்னும் பலமுறை கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். அதேபோல் கட்சி ஆரம்பித்த பின்னர், அரசியலாக விஜய் வெளியே வந்தது என்றால், மிகவும் குறைவுதான். அதாவது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்காக வெளியே வந்தார், அதேபோல் ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்க வந்தார் அவ்வளவுதான்.

இப்படியான சூழலில் விஜய்யை பலரும் அரசியல் தளத்தில் பண்ணையார் என விமர்சித்தனர். அப்படி இருக்கும்போது, பெரும்பாலான கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்தது, கட்சி கட்டமைப்பு பணிகளைச் செய்வதில் கவனம் செலுத்தியது என பல வேலைகளை முன்னின்று செய்பவர், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராக உள்ள புஸ்ஸி ஆனந்த்தான். இப்போது இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தவெகவினர் முன் வைத்து வருகின்றனர்.

புஸ்ஸி ஆனந்த் - விஜய்: குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் தன்னை விஜய் என்று நினைத்துக் கொள்கின்றார். மேலும் கட்சி நிர்வாகிகள் எது கூறினாலும் அதனைக் காது கொடுத்துக் கேட்காமல், தனது விருப்பத்திற்கு எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றார். மாவட்டச் செயலாளர்களிடம் எதுவும் கூறாமல், ஒரு மாவட்டத்திற்குள் நிர்வாகிகளை நியமிக்கின்றார். மேலும் தலைவர் விஜய்யிடம் நெருங்குவதற்கே அனுமதிக்க மாட்டேன் என்கின்றார். கடிதம் எழுதினால் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரியாமல் இருக்கின்றோம் என பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

பெருமாள் பிச்சை: இந்நிலையில் விஜய் ரசிகரும் தவெக ஆதரவாளருமான இணையவாசி ஒருவர், விக்ரம் நடிப்பில் வெளியான சாமி படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியைப் பகிர்ந்து, புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக பதிவிட்டுள்ளார். அவர் பகிர்ந்துள்ள காட்சியில், பெருமாள் பிச்சைக்குத்தான் மரியாதை. பெருமாள் பிச்சைகிட்ட பிச்சை எடுக்கிறவங்களுக்கு எல்லாம் மரியாதை கொடுக்க முடியாது என விக்ரம் பேசுகின்றார். அதாவது விஜய்க்குத்தான் மரியாதை, விஜய் உடன் இருக்கும் மற்றவர்களுக்கு எல்லாம் மரியாதை கொடுக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

கேப்சன்: மேலும் அந்த வீடியோவுக்கு, " நேத்து நைட்டில் இருந்து கட்சியில் இருக்கிற பெரிய மனுஷனுங்க ஆனந்துக்கு Praise Post போட்டுகிட்டு இருக்காங்க.. அதான் இன்னமும் சந்தேகத்தை கூட்டுது.. என் தலைவன் விஜய்க்கு மட்டும் தான் சலாம் போடுவேன்..அதுக்காக கூட இருக்கவங்களுக்கு எல்லாம் சலாம் போட முடியாது.." என கேப்சனும் செய்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











