Vijay: தளபதி 69 - தவெக முதல் மாநாடு பூஜை ஒரே நாளில்.. அழவா? சிரிக்கவா? தவிக்கும் தளபதி ரசிகர்கள்
சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ளவர் விஜய். வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அவர் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ளது. இதனால் தமிழ் சினிமாவில் இருந்து முற்றுலுமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனவும் கூறமுடியாமல் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது எனவும் கூற முடியாமல், இருந்தனர். இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 4ஆம் தேதி அவரது கடைசி படமான தளபதி 69 படத்தின் பூஜை நடைபெற்றது. அதேபோல் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான பூஜையும் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தி கோட். இந்தப் படம் வசூல் ரீதியாக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இதுமட்டும் இல்லாமல், படம் ஓடிடி தளத்தில் வெளியாகியும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் விஜய்க்கு முக்கிய இடம் உண்டு. இவரது படம் ரிலீஸ் ஆகின்றது என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். மேலும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சிதான். காரணம் விஜய் படங்களில் பக்காவான ஆக்ஷன் காட்சிகளும், அட்டகாசமான நடனங்களும் இருக்கும் என்பதால்தான். மேலும் சமூகத்திற்கு தேவையான அரசியல் கருத்துடைய படமாகவோ, குடும்ப உறவுகளை மைய்யமாகக் கொண்டோ படம் இருக்கும் என்பதால் ஒரு பக்காவான ஃபேமிலி எண்டர்டைனராக விஜய் படங்கள் இருக்கும். இதனாலே விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர்.

தவெக: விஜய் தனது ரசிகர்களை வைத்து உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றினார். மேலும் கட்சி தொடர்பான அறிவிப்பைத் தெரிவித்தபோது, சினிமாவில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும், தற்சமயம் ஒப்புக் கொண்ட படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து முற்றிலுமாக ஓய்வு பெறப்போவதாகவும் தெரிவித்தார். இதனால் இவரது நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 69 படம் கடைசிப் படம். மேலும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானபோது அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது என்பதையும் அறிவித்தது.

தளபதி 69: படத்தினை ஹெச். வினோத் இயக்க, படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதுமட்டும் இல்லாமல், படத்தினை கே.வி.என் புரடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படத்தில் விஜய்க்கு ரூபாய் 275 கோடிகள் சம்பளம் எனக் கூறபடுகின்றது. மேலும் இந்தச் சம்பளத்தின் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற புகழை அடைந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

ரசிகர்கள் ரியாக்ஷன்: விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே அவரும் அரசியல் களத்தில் குதித்துவிட்டார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. இப்படியான நிலையில், விஜய்யின் கடைசி பட பூஜையும் அவர் தொடங்கியுள்ள கட்சியின் முதல் மாநாட்டுக்கான பந்தகால் நடும் பூஜையும் ஒரே நாளில் நடைபெற்றுள்ளது. இதனை நினைத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவதா, அல்லது அழுவதா எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











