ஸ்டாலின் படம் பெருசா இருக்கு.. அதனால் விஜய்க்கு ஓட்டு.. நடிகையின் கேள்விக்கு விஜய் ரசிகர் வினோத பதில்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிந்து அரசியல் கட்சித் தலைவர்கள் அப்பாடா என்று ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இம்முறை நடிகர் விஜய் தேர்தலில் களமிறங்கி உள்ளதால் தேர்தல் களம் வழக்கத்தை விட சூடு பிடித்தது. விஜய்க்கு ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாடுகள் திரைத்துறையிலேயே இருந்தது. இப்படி இருக்கையில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை வினோதினி வைத்தியநாதன் தனது எக்ஸ் பக்கத்தில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஏன் வாக்களிக்க காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் ரசிகர்கள் நெட்டிசன்கள் பலரும் பதில் அளித்துள்ளனர்.
நடிகை வினோதினி வைத்தியநாதனின் கேள்விக்கு, " அவர் 2009-ல் விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கினார். அதன் மூலம் கடந்த 16 ஆண்டுகளாக எனது தொகுதியில் பல விஜய் ரசிகர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் இரத்த தான முகாம், ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குதல் போன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்" அதனால் நான் தவெகவுக்கு ஓட்டு போட்டேன் என்று கூறியுள்ளார்.
அதேபோல் மற்றொருவரோ, " அவர் இளைய தலைமுறையை சேர்ந்தவர். அவர் தனது தேர்தல் அறிக்கைகளில் இளைஞர் மற்றும் ஏ.ஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்காக சில நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார். நமக்கு திமுக, அதிமுக ஆகிய இந்த இரண்டு பழைய கட்சிகளும் தேவையில்லை. இனிமேல் இந்த இரண்டு ஊழல் கட்சிகள் நமக்குத் தேவைப்படமாட்டார்கள்" என்று பதில் அளித்துள்ளார்.

ஸ்டாலின் படம் பெருசா இருக்கு: ஏனென்றால், தமிழ்நாட்டைப் பற்றிய ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையை விட, கட்சி சுவரொட்டிகளில் உள்ள அவரது உருவப்படம் பெரியதாக இருக்கிறது என்றும், ஏனெனில், "சர்வாதிகாரத்திற்கு எதிரான" திமுகவின் நிலைப்பாடு, அவர்கள் அதிகாரத்தில் இல்லாத போது மட்டுமே பொருந்தும் என்றும், ஒவ்வொரு திட்டத்திற்கும் தங்கள் தலைவர்களின் பெயரையே வைத்தார்கள், ஆனால் 'வறுமை' என்ற திட்டத்திற்கு பெயர் மாற்ற மறந்து விட்டார்கள் என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
சிறுபான்மை சமூகத்தில்: மற்றொருவரோ, " வெறுமனே சமூக நீதி என்று சொல்வதை விட, ஊழல் பின்னணி இல்லாத ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சரை நான் பார்க்க விரும்புகிறேன். மேலும், நான் அவர்களின் தேர்தல் அறிக்கையைப் படித்தேன், அதில் உள்ள பெரும்பாலான திட்டங்கள் எனக்கு ஏற்புடையதாக இருந்தன. ஆன்லைன் டாஷ்போர்டு மூலம் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் அவர்களின் யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
இப்படியும் பதில்கள்: மேலும் சிலரோ, கத்தி பட கிளைமாக்ஸ், தூரத்தில் இருந்து பார்க்க அழகாக இருப்பார், நன்றாக நடனம் ஆடுவார், அவர் விஜய் அதனால் ஓட்டு போட்டேன் என்று பதிவிட்டுள்ளார்கள். இப்படிப் பதிவிட்டவர்கள் விஜய் ரசிகர்களா இல்லை விஜய் ரசிகர்கள் பெரும்பான்மையானவர்களின் பதில் இதுவாக இருக்குமா என்றும் யோசிக்க வைக்கிறது.


Click it and Unblock the Notifications