பீஸ்ட் திருவிழா ஆரம்பிச்சாச்சு...விஜய் ரசிகர்கள் என்ன காரியம் பண்ணிருக்காங்க பாருங்க
சென்னை : பீஸ்ட் டிரைலர் இன்று ரிலீசாக உள்ளதை கொண்டாடுவதற்காக விஜய் ரசிகர்கள் செய்துள்ள காரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஒரு சினிமாவிற்கா இந்த அளவுக்கு அக்கப்போர் என மக்கள் அவர்களை கலாய்த்து வருகின்றனர்.
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ரிலீசிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏப்ரல் 13 ம் தேதி பீஸ்ட் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. படத்தை மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

பிரம்மாண்ட ரிலீஸ் ரெடி
ஐந்து மொழிகளில் ரிலீசாக உள்ள பீஸ்ட் படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமான தொகைக்கு வெளிநாட்டு வெளியீட்டு உரிமம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஐங்கரன் இன்டர்நேஷனல் வெளிநாட்டு வெளியீட்டு உரிமத்தை வாங்கி உள்ளது. அமெரிக்காவில் பீஸ்ட் டிக்கெட் புக்கிங் ஏற்கனவே துவங்கப்பட்டதுடன், ரிலீசாகும் தியேட்டர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று டிரைலர் ரிலீஸ்
ரசிகர்கள் விடாமல் அப்டேட் கேட்டு வந்த போதெல்லாம் அமைதி காத்த சன் பிக்சர்ஸ், தற்போது விடாமல் அப்டேட் வெளியிட்டு வருகிறது. பீஸ்ட் படத்திற்கு டீசர் இல்லை, ஆடியோ ரிலீஸ் இல்லை, க்ளிம்ப்ஸ் இல்லை, மோஷன் போஸ்டர் இல்லை என ரசிகர்கள் ஆதங்கப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக, பீஸ்ட் டிரைலரை ஏப்ரல் 2 ம் தேதி வெளியிட உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்ததால் ரசிகர்கள் செம குஷியாகி விட்டனர்.

கவர் போட்டோவில் பீஸ்ட்
இன்று பீஸ்ட் டிரைலர் ரிலீசாக உள்ளதை முன்னிட்டு, எதிர்பார்ப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் வகையில் அடுத்தடுத்து ட்வீட் போட்டு வருகிறது சன் பிக்சர்ஸ். பீஸ்ட் ரிலீசிற்கு இன்னும் 11 நாட்களே உள்ளதால் சன் பிக்சர்சின் ட்விட்டர் கவர் போட்டோவிலும் பீஸ்ட் போஸ்டர் மாற்றப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் கொண்டாடி வருவதை தாண்டி பீஸ்ட் பட ரிலீசையே பிரம்மாண்ட திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

பீஸ்ட் திருவிழா ஆரம்பிச்சாச்சு
பீஸ்ட் டிரைலர் ரிலீஸ் நாளான இன்று நல்ல நேரம் பார்த்து, பீஸ்ட் திருவிழாவிற்கு பந்தக்கால் நட்டுள்ளனர் விஜய் ரசிகர்கள். பட ரிலீசை திருவிழா என வாய் வார்த்தைக்காக சொல்கிறார்கள் என பார்த்தால் நிஜமாகவே கோயில் திருவிழா நடத்துவது போல் பந்தக்கால் எல்லாம் நட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளனர். இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இதை பார்ப்பவர்கள், ஒரு சினிமா ரிலீசுக்கா இந்த அக்கப்போரு என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











