விடுதலை 2 சீனை திடீரென டிரெண்ட் செய்து வெற்றிமாறனை கேள்வி கேட்கும் விஜய் ரசிகர்கள்.. காரணம் அதுதான்!
சென்னை: விடுதலை 2 படத்தின் டிரெய்லர் வரும் போதே விஜய்க்கு எதிரான வசனத்தை கடைசியில் வெற்றிமாறன் வைத்துள்ளார் என சர்ச்சைகள் வெடித்தன. ஆனால், அந்த வசனம் எம்ஜிஆருக்காக வைக்கப்பட்டது என வேறு சில பஞ்சாயத்துக்களும் வெடித்தன. படத்தில் திமுகவை ஆதரித்து ஏகப்பட்ட குறியீடுகளை வெற்றிமாறன் வைத்திருந்ததாகவும் விமர்சனங்கள் கிளம்பின.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய பிரச்சனையை விஜய் கையில் எடுத்துள்ள நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான விடுதலை 2 படத்தின் முக்கியமான காட்சியை ஷேர் செய்து வெற்றிமாறனுக்கு விஜய் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

சினிமாவில் மட்டும் மலைவாழ் மக்களின் இடங்களை அரசு அடித்து பிடுங்கக் கூடாது என பேசும் வெற்றிமாறன் பரந்தூர் மக்களுக்காக குரல் கொடுக்காமல் இருப்பது ஏன் என்கிற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
பரந்தூரில் விஜய் ஆவேச பேச்சு: நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து கட்சியினரின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வந்த தளபதி விஜய்யை வைத்து உதயநிதி ஸ்டாலின் குருவி படமெல்லாம் தயாரித்து வெளியிட்டார். சன் பிக்சர்ஸ் சர்க்கார் படத்தையே தயாரித்து வெளியிட்டது. ஆனால், அரசியல் கட்சியை ஆரம்பித்து 2026ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் ஆகவேண்டும் என்கிற முனைப்போடு செயல்பட்டு வரும் விஜய் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் மக்களை சந்தித்து அவர்களுடன் ஆவேசமாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசை கண்டித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்ததாக விஜய் வேங்கை வயலுக்கும் செல்ல உள்ளதாக தகவ்லகள் வெளியாகி உள்ளன.
விடுதலை 2 வசனம்: ஒரு பக்கம் 4 பேர் நடந்து போறாங்க, இன்னொரு பக்கம் ஒரே ஒரு ஆள். உன்னோட கார் பிரேக் பிடிக்கல. அந்த பக்கம் போற 4 பேர் மீது வண்டியை ஏத்துவியா? இல்லை இந்தப்பக்கம் போற ஒருத்தர் மீது வண்டியை ஏத்துவியான்னு விஜய் சேதுபதி கேட்க, ஒருத்தர் மீது தான் ஏத்த வேண்டும் என போலீஸ்காரர் சொன்னதும் அந்த ஒருவர் உன் அம்மாவா இருந்தா என அடுத்த கேள்வியை முன் வைத்ததுமே ஆடிப்போய்விடுவார்கள். ஒரு இடத்தில் ஒருவன் 100 வருஷம், 200 வருஷம் வாழ்ந்திருப்பான். அவனுக்கு அந்த இடம் தான் மூலதனம். அவனை அப்புறப்படுத்த வேண்டும் என்றால் அவன் சம்மதம் இல்லாமல் செய்வது அராஜகம் இல்லையா என விடுதலை 2 படத்தில் மக்கள் புரட்சியை மையப்படுத்தி படம் எடுத்த வெற்றிமாறன் பரந்தூர் விமான நிலைய பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல் இருப்பது ஏன் என விடுதலை 2 வசனத்தை ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஓடிடியில் விடுதலை 2: அமேசான் பிரைம் ஓடிடியில் விடுதலை 2 திரைப்படம் வெளியான நிலையில், அந்த படத்தை பார்த்துவிட்டு பலரும் அந்த படத்தின் மையக்கருத்தை பாராட்டி வருகின்றனர். கன்னட திரையுலகில் வெளியான காந்தாரா படத்தின் கதையும் இதுதான். படங்களில் மட்டும் ரசிகர்கள் பார்த்துவிட்டு பாராட்டுகின்றனர். ஆனால், நிஜ வாழ்க்கையில் போராடும் மக்களை துச்சமாக நினைத்து கொச்சைப்படுத்தி பேசுவது தான் இயல்பான வாழ்க்கையாக மாறிவிட்டது என்கின்றனர். உங்களுடைய வீடுகளை இடித்துவிட்டு அரசாங்கம் ஏதாவது கட்ட வேண்டும் என்றால் அப்போது நீங்கள் சிரித்துக் கொண்டே சம்மதம் தெரிவிப்பீர்களா என்கிற கேள்வியை விஜய் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











