100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி 1000 ரூபாய்க்கு விற்கிறார்.. புஸ்ஸி ஆனந்த் மீது எஸ்.ஏ.சி புகார்!
சென்னை: தன்னையும் தனது மகன் விஜய்யையும் பிரித்தது விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் தான் என்று புகார் அளித்துள்ளார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்.
நடிகர் விஜய் நடிக்கும் படங்களின் முதல் நாள் டிக்கெட்டை 100 ரூபாய்க்கு வாங்கி 1000 ரூபாய்க்கு விற்கிறார் புஸ்ஸி ஆனந்த் என்றும், விஜய் மக்கள் இயக்கத்தை வணிக மயமாக மாற்றிவிட்டார் என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்.
எஸ்.ஏ. சந்திரசேகர் தனது பெயரை பயன்படுத்தி எந்தவொரு அரசியல் கட்சியையும் ஆரம்பிக்கக் கூடாது என நடிகர் விஜய் அப்பாவுக்கு எதிராக அதிரடி அறிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சி
இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் விஜய் பெயரில் அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்து அதனை ஆரம்பிக்கும் பணிகளை தொடங்கிய அடுத்த கணமே, நடிகர் விஜய், அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும், தனது ரசிகர்கள் அந்த கட்சியில் பங்குபெற கூடாது என்றும் அதிரடியாக அறிக்கை விடுத்தார்.

விரிசலுக்கு காரணம்
தான் தான் சினிமாவில் விஜய்யை அறிமுகம் செய்தேன், இப்போ என்னையே எதிர்த்து பேசும் அளவுக்கு வளர்ந்து விட்டார். எனக்கும் என் மகனுக்கும் இடையே விரிசல் ஏற்பட காரணமே புஸ்ஸி ஆனந்த் தான் என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்.

மாஃபியா வலையில் விஜய்
நடிகர் விஜய் மாஃபியா வலையில் சிக்கியிருப்பதாகவும் அவரை அந்த வலையில் புஸ்ஸி ஆனந்த் தான் சிக்க வைத்துள்ளார் என்றும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை எஸ்.ஏ. சந்திரசேகர் அடுக்கி உள்ளார். மேலும், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சிலரையும் அதிரடியாக பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்ததற்கு பின்னணியிலும் புஸ்ஸி ஆனந்த் தான் உள்ளார் எனக் கூறியுள்ளார்.

1000 ரூபாய் டிக்கெட்
மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் 200 கோடியை கடந்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முதல் நாள் டிக்கெட் அனைத்தையும் 100 ரூபாய்க்கு வாங்கி வைத்துக் கொண்ட புஸ்ஸி ஆனந்த், விஜய் ரசிகர்களிடமே 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து மோசடி செய்துள்ளார் என்கிற பரபரப்பு குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.

வணிக மையம்
புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் தான் தனது மகன் விஜய் உள்ளார் என்றும், நற்பணி இயக்கமாக செயல்பட்டு வந்த விஜய் மக்கள் இயக்கம், தற்போது வணிக மையமாகி விட்டது என்றும் இயக்குநரும் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ. சந்திரசேகர் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளையும் புஸ்ஸி ஆனந்த் மீது அடுக்கி உள்ளார்.

விளக்கம் கொடுப்பாரா விஜய்
தனது அப்பா வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் விஜய் விளக்கம் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. உண்மையிலேயே தவறு யாருடையது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் 100 ரூபாய் டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்தாரா? அந்த பணத்தை யாருக்கு கொடுத்தார் என ஏகப்பட்ட கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











