என்னது ரஜினிக்கு பயமா?.. விஜய் மாதிரி கொடநாடு கேட்டில் அவர் நிற்கவில்லை.. விளாசிய எஸ்.வி.சேகர்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கும் விஜய்; நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் மனப்பான்மையில் இருந்தார். ஆனால் அக்கட்சி தேசிய ஜன்நாயக கூட்டணியில் சேர்வதற்கான வேலைகளை தொடங்கிவிட்டதாக தகவல்கள் வருகின்றன. நாளைதான் விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என இருக்கும் நிலையில் இன்றே அவர் டெல்லிக்கு சென்றிருக்கிறார். இன்று சில பாஜக தலைவர்களை அவர் ரகசியமாக சந்திக்கக்கூடும் எனவும் தெரிகிறது.
நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கும் விஜய்; எப்படியாவது கோட்டைக்குள் நுழைந்துவிட வேண்டும் என அத்தனை வேலைகளையும் செய்துவருகிறார். அவர் கட்சி ஆரம்பித்தபோது நிச்சயம் திமுகவுக்கு எதிர் நிலையில் இருக்கும் கட்சிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. விஜய் மீது சங்கீதா வைத்திருக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களும், திரிஷாவுடன் விஜய் ஜோடியாக வந்ததும் அவருக்கு நெருக்கடியை உண்டு செய்திருப்பதாகவும்; அவருடன் சேர்ந்தால் நமது அரசியல் வாழ்க்கையும் முடிந்துவிடும் என்பதால்தான் யாரும் அவருடன் சேரவில்லை எனவும் ஒரு கருத்து நிலவுகிறது.

முடிவை மாற்றிய விஜய்?: இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது அல்லது தனது தலைமையில் கூட்டணியை அமைப்பது என இருந்தார் விஜய். ஆனால் சில வாரங்களாக நடக்கும் விஷயங்கள் எதுவும் அவருக்கு சாதகமாக இல்லாததால்; உள்ளுக்குள் ஒரு பயம் வந்துவிட்டதாகவும்; அதன் காரணமாக அதிமுக - பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்வதற்கு முடிவெடுத்துவிட்டதாக நேற்றிலிருந்து தகவல் ஓடுகிறது. நேற்றைக்கு நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் பலரும் கூட்டணிக்கு செல்ல ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
டெல்லி செல்லும் விஜய்: கரூர் உயிரிழப்பு தொடர்பாக நாளை சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் இன்றே டெல்லிக்கு செல்கிறார். அங்கே சென்று இன்று பாஜக தலைவர்கள் சிலரை ரகசியமாக சந்திப்பதாகவும் தெரிகிறது. ஒருவேளை கூட்டணி உறுதியானால், தவெகவுக்கு 50 தொகுதிகள் வரைக்கும், விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதும்தான் டீலிங் என்றும் விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். இப்படி அரசியலில் விஜய்யை சுற்றி ஏகப்பட்ட காய்கள் நகர்த்தப்படுகின்றன.
ரஜினியை வம்பிழுத்த ஆதவ்: ஆனால் அவருடன் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது, 'ரஜினியை திமுக மிரட்டியது. அதனால்தான் அவர் அரசியலுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் அதை தாங்கக்கூடிய மன வலிமை ரஜினிக்கு இல்லாமல் போய்விட்டது. விஜய் அப்படி இல்லை. எதற்காகவும் பின்வாங்கமாட்டார்' என கொளுத்திப்போட்டார். அதனால் ரஜினி ரசிகர்கள் ஆதவ் அர்ஜுனாவையும், விஜய்யையும் செமத்தியாக தாக்கிவருகிறார்கள்.
எஸ்.வி.சேகர் வீடியோ: இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "ரஜினியை பற்றி தெரியுமா உங்களுக்கு?.. முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த மேடையிலேயே, சொடுக்கு போட்டு, 'இனிமேல் இந்த தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என கூறினார். அஜித் அளவுக்கு உங்கள் தலைவரால் (விஜய்) வர முடியுமா?.. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதே அவரை வைத்துக்கொண்டே, 'எங்களை நிகழ்ச்சிகளுக்கு வரசொல்லி மிரட்டுகிறர்கள்' என கூறினார். ரஜினியும் சரி, அஜித்தும் சரி கொடநாட்டில் குளிரில் கைகளை கட்டிக்கொண்டு கேட்டில் நின்று படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என பிச்சைக்காரர் மாதிரி கேட்கவில்லை. அப்படிப்பட்ட ஒருவரை வைத்துக்கொண்டு நீங்கள் அடுத்தவரை பற்றி பேசுகிறீர்களே" என்றார்.


Click it and Unblock the Notifications