கைவிரித்த சூர்யா, ஹரி: கைகொடுத்த விஜய்
சென்னை: சிங்கம் 2 படப்பிடிப்பின் போது காலில் அடிபட்டு இனிமேல் நடக்க முடியாது என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்ட ஸ்டண்ட் கலைஞரின் குடும்பத்திற்கு விஜய் உதவி செய்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் நடித்த படம் சிங்கம் 2. சிங்கம் படத்திலேயே சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களை புரட்டி எடுத்தார். சிங்கம் 2 படத்திலும் சண்டைக் காட்சிகளில் சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களை புரட்டி எடுக்கும் காட்சிகளுக்கு குறைவில்லை.

சிங்கம் 2 படத்தின் ஒரு காட்சியில் கடலில் நிற்கும் கப்பலில் இருந்து வில்லனை சூர்யா தூக்கி வீச வேண்டும். இந்த காட்சியில் ரஞ்சன் என்பவர் நடித்திருந்தார். அவர் ஹரியின் பல படங்களில் அடியாளாக நடித்தவர்.
ரஞ்சனுக்கு காயம்
சண்டை காட்சியில் சூர்யா ரஞ்சனை அடித்து நொறுக்க, ரஞ்சன் எகிறி குதித்து கடலில் விழுகிறார். அப்போது அவர் தடுமாறி பாறையின் மீது விழுகிறார். இந்த காட்சியில் ரஞ்சனின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இனி நடக்கவே முடியாது
ரஞ்சனை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரால் இனி நடக்கவே முடியாது என்று தெரிவித்தனர். சூர்யா ரஞ்சனை மருத்துவமனைக்கு வந்து ஒரு முறை பார்த்துள்ளார். அதன் பிறகு படக்குழுவினர் யாரும் அவரை கண்டுகொள்ளவே இல்லையாம்.
இன்ஸ்பெக்டர்
சிங்கம் 2 படப்பிடிப்பிற்கு பாதுகாப்புக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ரஞ்சனின் மருத்துவ செலவை ஏற்றிருக்கிறார். அந்த இன்ஸ்பெக்டர் சென்னைக்கு சென்று ஹரியையும், சூர்யாவையும் சந்தித்து ரஞ்சனின் பரிதாப நிலையை எடுத்துக் கூறியுள்ளார்.
ஆனால், ஹரியும், சூர்யாவும் கையைவிரிக்க அந்த இன்ஸ்பெக்டருக்கு சென்னையில் ஜில்லா படப்பிடிப்பு நடப்பது குறித்து தெரிய வந்துள்ளது. உடனே அவர் படப்பிடிப்புக்கு சென்று விஜய்யை சந்தித்து விவரத்தை தெரிவித்துள்ளார். உடனே விஜய் ரூ.40,000 ரொக்கம் மற்றும் 2 மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை தனது உதவியாளர் மூலம் ரஞ்சன் வீட்டுக்கு அனுப்பி வைத்தாராம்.


Click it and Unblock the Notifications











