GOAT படத்தை பார்த்த விஜய் சொன்னது இதுவா?.. தளபதி செம ஹேப்பியாம்.. எகிறும் எதிர்பார்ப்பு
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கும் இப்படமானது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்திலிருந்து இதுவரை இரண்டு சிங்கிள்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கின்றன. அடுத்த சிங்கிள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் கோட் படத்தை விஜய் பார்த்துவிட்டதாக ஒரு தகவல் உலாவிக்கொண்டிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக விஜய் நடித்த படம் லியோ. ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய மாஸ்டர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததன் காரணமாக லியோ மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்தப் படம் விமர்சன ரீதியாக பலத்த சேதாரமடைந்தது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

விஜய்யுடன் நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், பிரேம்ஜி, சினேகா, லைலா,வைபவ் என பலர் நடித்திருக்கிறார்கள். தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் வெங்கட் பிரபு தன்னை நிரூபித்தவர் என்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. முக்கியமாக அஜித்துக்கு எப்படி மெகா ஹிட்டை வெங்கட் கொடுத்தாரோ அதேபோன்ற ஒரு ஹிட்டை விஜய்க்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் தளபதி ரசிகர்களின் ஆவல்.
இரண்டு வேடங்கள்?; இந்தப் படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் டபுள் ஆக்ஷனில் நடித்த அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட படங்கள் ஃப்ளாப் என்ற ஒரு லிஸ்ட் உண்டு. எனவே அந்த செண்ட்டிமெண்ட்டை கோட் படம் கண்டிப்பாக முறியடிக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். மேலும் இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகியிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுவதால் படம் ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இரண்டு சிங்கிள்கள்: படத்திலிருந்து இதுவரை இரண்டு சிங்கிள்கள் வெளியாகியிருக்கின்றன. இரண்டு பாடல்களையுமே விஜய் பாடியிருந்தாலும் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. முக்கியமாக யுவன் ஷங்கர் ராஜா பல வருடங்களுக்கு பிறகு விஜய் படத்துக்கு இசையமைப்பதால் தரமான சம்பவம் செய்வார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மூன்றாவது சிங்கிள் விரைவில் ரிலீஸாகவிருப்பதாகவும்; அந்தப் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
படம் பார்த்த விஜய்?: இந்நிலையில் GOAT படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி கோட் படத்தின் முதல் பாதியை விஜய் சமீபத்தில் பார்த்ததாகவும்; அதனை பார்த்துவிட்டு 'சும்மா தெறிக்குது' என்று வெங்கட் பிரபுவிடம் உற்சாகத்தோடு கூறியதாகவும் தகவல்கள் வருகின்றன. கோட் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும்; அதுதான் அவரது கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications