நீயா நானாவில் கஷ்டத்தை சொன்ன மாணவன்.. அரை மணி நேரத்தில் உதவிகளை வாரி வழங்கிய விஜய்.. தாய் நெகிழ்ச்சி
சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளில் நீயா நானா நிகழ்ச்சிக்கு தனி இடம் உண்டு. அந்த நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிபரப்பாகிவருகிறது. அந்த நிகழ்ச்சியால் பலரது வாழ்க்கையில் ஒளி ஏற்பட்டிருக்கிறது. அப்படித்தான் நேற்றைய எபிசோடின் மூலம் ஒரு மாணவனின் வாழ்க்கையிலும் ஒளி வந்திருக்கிறது. அதனை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏற்றி வைத்திருக்கிறார். அந்த மாணவனுக்கும், மாணவனின் குடும்பத்துக்கும் ஏகப்பட்ட உதவிகளை செய்திருக்கிறார் விஜய்.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சிக்கு தனி இடம் இருக்கிறது. கோபிநாத் அந்த நிகழ்ச்சியை பல வருடங்களாக தொகுத்து வழங்கிவருகிறார். அதில் ஏகப்பட்ட டாபிக்குகள் இதுவரை பேசப்பட்டிருக்கின்றன. அப்போது வலி படர்ந்தவர்கள் தங்களுடைய கஷ்டங்களை சொல்லும்போது அவர்களது வாழ்க்கையில் ஒளியும் ஏற்றப்பட்டிருக்கிறது.

நேற்றைய எபிசோட்: அந்தவகையில் நேற்றைய எபிசோட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிரது. அதாவது படித்துக்கொண்டே வேலைக்கு செல்லும் மாணவர்கள் படும் வலியும், அந்த மாணவர்களின் பெற்றோர்கள் பேசுவதும்தான் நேற்றைய பேசுபொருளாக இருந்தது. நேற்றைய எபிசோடில் பேசிய மாணவர்களின் வலியை காணும்போது நாம் படுவதெல்லாம் ஒரு கஷ்டமே இல்லை என்ற எண்ணம்தான் தோன்றியது. குறிப்பாக வாழை படம் ரிலீஸான சமயத்தில் இந்த எபிசோட் ஒளிபரப்பப்பட்டது மேலும் இம்பேக்ட்டை ஏற்படுத்தியது.
கஷ்டத்தை சொன்ன மாணவர்கள்: இயக்குநர் மாரி செல்வராஜ் நேற்றைய எபிசோடில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள். மூட்டை தூக்கும் மாணவன், ஆட்டோ ஓட்டும் மாணவன், வாழை தார் சுமக்கும் மாணவன், பிரியாணி கடையில் வேலை பார்க்கும் மாணவி, ஹோட்டலில் சர்வர் வேலை பார்க்கும் மாணவி என பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டு தாங்கள் படும் கஷ்டங்களை கலங்கியபடி சொல்லி; பார்ப்பவர்களையும் கலங்க செய்தார்கள்.
மூட்டை தூக்கிய மாணவன்: அந்த எபிசோடில் கோவில்பட்டியை சேர்ந்த மாணவன் ஒருவர், 'நான் மூட்டை தூக்குகிறேன். அந்த மூட்டையை தூக்கும்போதெல்லாம் கழுத்து பயங்கரமாக வலிக்கும். வீட்டில் அதை சொல்லிக்கொள்ளமாட்டேன். சில சமயம் பேருந்தை விட்டுவிட்டால் இரவு பத்து மணிக்கு மூன்று கிலோமீட்டர்வரை நடந்தே செல்வேன். அப்போது எனது தாயையும், தந்தையையும் நல்ல இடத்தில் அமர வைக்க வேண்டும். எனது தாயை ஒரு மெத்தையில் படுக்க வைக்க வேண்டும் என தோன்றும்' என்று கூறினார். அவரது தாய்க்கு எலும்பு தேய்மானம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை கேட்ட கோபிநாத் அவரது தாயிடம் பையனை வேலைக்கு அனுப்பாமல் படிக்க வையுங்கள் என்று அறிவுரை சொல்லி; மூட்டையை தூக்கிப்போட செய்தார்.
விஜய்யின் உதவி: இந்நிலையில் அந்த மாணவனுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் உதவிகளை செய்திருக்கிறார். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி முடிந்த அரை மணி நேரத்திலேயே மாணவனின் தாய்க்கு ஒரு மெத்தை, வீட்டுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை சாமான்கள், 25,000 ரூபாய் பணம் உள்ளிட்டவைகளையும்; அவர்களது வங்கிக் கணக்கில் 25,000 ரூபாய் பணத்தையும் அனுப்பியிருக்கிறார்.
தாய் நெகிழ்ச்சி: இதுகுறித்து பேசிய மாணவனின் தாய், 'இந்த நிகழ்ச்சியை தளபதி விஜய் பார்ப்பார் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவர் பார்த்த அரை மணி நேரத்திலேயே எங்களுக்கு தேவையான பலசரக்கு சாமான்கள், எனக்கு மெத்தையை கொடுத்தார். அதேபோல் எனது மகனின் மூன்று வருட படிப்பு செலவையும் பார்த்துக்கொள்வதாக கூறியிருக்கிறார்கள். எங்களது அக்கவுண்ட்டுக்கு 25,000 ரூபாய் பணத்தையும் போட்டிருக்கிறார்கள். ரொம்ப நன்றி' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். முன்னதாக இசையமைப்பாளர் தமனும் அந்த மாணவனுக்கு ஒரு இரு சக்கர வாகனத்தை கொடுப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











