முதலிடத்தில் விஜய்.. கடைசி இடத்தில் அஜித்.. ட்விட்டர் வெளியிட்ட ஷாக்கிங் டாப் 10 பட்டியல்!
சென்னை: இந்த ஆண்டு ட்விட்டர் சமூக வலைதளத்தில் தென்னிந்திய நடிகர்களில் அதிகளவு பேசப்பட்ட நடிகர்கள் டாப் 10 பட்டியலை ட்விட்டர் இந்தியா தற்போது வெளியிட்டுள்ளது.
இதில், தளபதி விஜய் முதல் இடத்திலும் நடிகர் அஜித் குமார் 10வது இடத்திலும் உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
எந்த எந்த நடிகர் எந்த எந்த இடங்களை பிடித்துள்ளனர் என்பது குறித்து விவரமாக இங்கே பார்ப்போம்.

முதலிடத்தில் விஜய்
சோஷியல் மீடியா கிங்காக இந்த ஆண்டும் ஏகப்பட்ட டாப் 10 பட்டியல்களில் இடம்பெற்று நடிகர் விஜய் அசத்தி உள்ளார். நடிகர் விஜய் மற்றும் அவர் நடித்த படத்தின் ஹாஷ்டேக்குகள் 2021ம் ஆண்டின் டாப் டிரெண்டிங் பட்டியல்களில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் 2021ம் ஆண்டில் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட நடிகர்கள் பட்டியலிலும் தளபதி விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார்.

2ம் இடத்தில் பவன் கல்யாண்
தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் நடிகரான பவன் கல்யாண் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். பவன் கல்யாணின் ரசிகர்கள் தான் டோலிவுட் ரசிகர்கள் போட்டியில் செம டஃப் கொடுத்து மற்ற நடிகர்களை விட பவன் கல்யாணை இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். வக்கீல் சாப், பீம்லா நாயக் என ட்விட்டரே டிரெண்டிங்கில் ஒரே அல்லோகலப்பட்டது.

3ல் மகேஷ் பாபு
டோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும் செளத் இந்தியன் பிரின்ஸ் என்றும் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மகேஷ் பாபு இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். மகேஷ் பாபு ரசிகர்கள் மற்றும் பவன் கல்யாண் ரசிகர்கள் மத்தியில் தான் பலத்த போட்டி டோலிவுட்டில் என இதன் மூலம் தெரிகிறது.

4ல் சூர்யா
சூரரைப் போற்று படம் படைத்த சாதனைகள், ஜெய் பீம் படத்துக்கு வந்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு என நடிப்பின் நாயகன் சூர்யா இந்த பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளார். மேலும், 2டி நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வெளியிட்டது. சமூக கருத்துக்களை தயக்கம் இன்றி சொன்னது என கோலிவுட் ஹீரோக்களில் இரண்டாம் இடத்தையும் தென்னிந்தியாவில் 4ம் இடத்தையும் சூர்யா பிடித்துள்ளார்.

5ல் ஜூனியர் என்.டி.ஆர்
இயக்குநர் ராஜமெளலியின் RRR எனும் இரத்தம் ரணம் ரெளத்திரம் படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர் இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளார். வரும் ஜனவரி 7ம் தேதி வெளியாகவுள்ள பிரம்மாண்ட பட்ஜெட் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

6ல் அல்லு அர்ஜுன்
புஷ்பா படத்தின் ஹீரோ ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் இந்த பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளார். அலா வைகுந்தபுறமுலோ படத்தின் வெற்றி மற்றும் புஷ்பா படம் மீதான எதிர்பார்ப்பு என ஏகப்பட்ட விஷயங்கள் அல்லு அர்ஜுனை இந்த இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளன.

7ல் ரஜினிகாந்த்
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளார். அண்ணாத்த படம், உடல் நிலை சரியில்லாமல் போனது, அரசியலுக்கு முழுக்கு என ஏகப்பட்ட விஷயங்கள் தொடர்பாக அதிகளவில் இந்த ஆண்டு ட்விட்டரில் ரஜினிகாந்த் பெயரை ரசிகர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

8ல் ராம்சரண்
இயக்குநர் ராஜமெளலியின் RRR, இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் RC15 படம், அப்பா சிரஞ்சீவி உடன் ஆச்சார்யா என படு பிசியாக சினிமாவில் நடித்து வரும் நடிகர் ராம் சரண் இந்த பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளார். அடுத்த ஆண்டு ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியான பிறகு இந்த பட்டியலில் இருந்து மேலும், முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

9வது இடத்தில் தனுஷ்
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என ஏகப்பட்ட மொழி படங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ் அடிக்கடி ரசிகர்களுடன் ட்விட்ட்ர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கனெக்ட்டில் உள்ளார். அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் இயக்கத்தில் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் ஆன நிலையில், பலரும் அது குறித்து ட்விட்டரில் விவாதித்தனர். அதே போல அசுரன் படத்திற்காக தேசிய விருதையும் தனுஷ் வென்ற நிலையிலும் பலரும் அவரை பாராட்டித் தள்ளினர்.

கடைசி இடத்தில் அஜித்
இந்த டாப் 10 பட்டியலில் நடிகர் அஜித் கடைசி இடமான 10வது இடத்தை பிடித்துள்ளது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் ரசிகர்கள் அதிகமாக வலிமை அப்டேட் பற்றி கேட்டு வந்த நிலையிலும் அஜித் இந்த இடத்தை பிடிக்க காரணம் ரசிகர்கள் பலரும் அவரை தல என அழைத்து வந்தது தான் காரணமாக இருக்கும் என்றும் அஜித் குமார் என அழைக்க அஜித் சொல்லி உள்ள நிலையில், அடுத்த ஆண்டில் இந்த பட்டியலில் அஜித் குமார் டாப்புக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த பட்டியலில் ட்விட்டரில் இல்லாத ஒரே தல அஜித் தான்!


Click it and Unblock the Notifications











