ஒரு பக்கம் சிபிஐ.. இன்னொரு பக்கம் ஜனநாயகன் பிரச்னை.. இன்று விஜய்க்கு நல்ல செய்தி வருமா?
சென்னை: தவெக தலைவர் விஜய்; ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கிறார். இதுதான் அவரது கடைசி படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாவதாக இருந்த படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸிலிருந்து தள்ளிப்போனது. இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று நடக்கிறது.
அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து விஜய்க்கு சில பிரச்னை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. உங்கள் விஜய் நா வரேன் என்கிற பெயரில் அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கரூருக்கு செல்கையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இது பெரிய அவப்பெயரை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. பலரும் அவரை விமர்சனமும், ட்ரோலும் செய்துவருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை நேரில் கூப்பிட்டு ஆறுதல் தெரிவித்தார் விஜய்.
ஜனநாயகன் படம்: இதற்கிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்தார். அரசியல் பிரவேசம் செய்திருப்பதால் இதுதான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. எனவே இதனை திருவிழா போல் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்காததால் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாவதாக இருந்த படம் தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போனது. மேலும் இவ்விவகாரம் நீதிமன்றத்துக்கும் சென்றது.

நீதிமன்றத்திலும் ட்விஸ்ட்: முதலில் இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜனநாயகனுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அதை எதிர்த்து மத்திய தணிக்கை குழு வாரியம் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிமன்றம்; தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தார். இதை எதிர்பார்க்காத பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என கூறி தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்.
இன்று விசாரணை: இப்படி ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளோடு நடந்துகொண்டிருக்கிறது இந்த வழக்கு. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த வழக்கை 17ஆவது வழக்காக இன்று விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்திருப்பதாகவும்; காலை 11.30 மணியளவில் இவ்விசாரணை நடக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒருபக்கம் கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு இரண்டு முறை ஆஜரானார் விஜய்.
நல்ல செய்தி வருமா?: அப்போது சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியதாகவும்; அவரது பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதெல்லாம் சுத்த பொய் என தவெகவை சேர்ந்த நிர்மல் குமார் உள்ளிட்டோர் விளக்கினார்கள். இதனால் தளபதி ரசிகர்கள் நிம்மதியடைந்தார்கள். சிபிஐ விஷயத்தில் விஜய்யின் பெயர் சேர்க்கப்படவில்லை என்ற நல்ல செய்தி நேற்று வந்ததுபோல்; ஜனநாயகன் படத்தின் ரிலீஸுக்கு ஏற்பட்ட சிக்கல் தீர்ந்துவிட்டது என்ற நல்ல செய்தி இன்று வருமா என எதிர்பார்த்திருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள். ஜனநாயகன் படத்துக்கு ஏற்பட்ட பிரச்னையை நீதிமன்றம் இன்று தீர்த்துவைக்கும்பட்சத்தில் இந்த மாதத்தின் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











