நீங்க மதுரை - விருதுநகரா? ஜன நாயகன் FDFS டிக்கெட் செல்லும்.. பத்திரமா வெச்சுக்காங்க.. விவரம் உள்ளே!
மதுரை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி நாளை வெளியாவதாக இருந்த படமான ஜன நாயகன் படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்சார் சான்றிதழ் கிடைத்த பின்னரே படத்திற்கு அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி தெரிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்துவிட்டது. இப்படி இருக்கையில் படம் நாளை வெளியாகும் என்று படத்திற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு டிக்கெட்டிற்குரிய பணம் திரும்ப கொடுக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மற்றும் விருது நகர் மாவட்டங்களில் உள்ள ரிட்சி திரையரங்கம் ரசிகர்களுக்கு பணத்தை திருப்பித் தருவது தொடர்பாக அறிவித்துள்ள அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
அதாவது, " ஜனவரி 9ஆம் தேதி நடைபெற இருந்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸ் கவுண்டரில் டிக்கெட் பெற்றவர்கள், இன்று அதே கவுண்டரில் வந்து ரிஃபண்ட் பெற்றுக்கொள்ளலாம்.

ஜனவரி 9 ஆம் தேதிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் தானாகவே ரிஃபண்ட் செய்யப்படும். ஆன்லைனில் டிக்கெட் பெற்றவர்கள் பாக்ஸ் ஆபிஸிற்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். கூட்ட நெரிசலை தவிர்க்க, முதலில் ஜனவரி 9 ஆம் தேதிக்கான ரிஃபண்ட் மட்டுமே வழங்கப்படும்.அது முடிந்ததும், அடுத்த தேதிகளுக்கான ரிஃபண்ட் விவரங்கள் அறிவிக்கப்படும்.FDFS டிக்கெட் வைத்திருப்பவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை வைத்திருக்கலாம். புதிய தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும், அந்த டிக்கெட்டுகள் செல்லுபடியாகும் - ரிட்சி சினிமாஸ்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
பணம் திரும்ப தரும் பணிகள்: இதனால் மதுரை, திருமங்கலம் மற்றும் விருதுநகர் பகுதிகளில் ரிட்சி சினிமாஸ் திரையரங்கில் ஜன நாயகன் படத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த ரசிகர்கள் அவற்றிக்கான பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும் படியும், முதல் நாள் முதல் காட்சிக்காக தயாரிக்கப்பட்ட சிறப்பு டிக்கெட்டுகளை ரசிகர்கள் பத்திரமாக வைத்திருக்கும் படியும் தியேட்டர் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதால், ஜன நாயகன் எப்போது வெளியானாலும் ரிட்சி திரையரங்கில் வெளியாகும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். இந்த திரையரங்கில் மட்டும் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தியேட்டர் நிர்வாகமே தெரிவித்துள்ளது.

ஜன நாயகன்: நடிகர் விஜய் தனது கட்சி தொடங்கிய போது, தான் கமிட் ஆகி உள்ள கடைசி படத்தில் மட்டும் நடித்து விட்டு, அதன் பின்னர் முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்தார். இதனால் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்திற்கு விஜய்க்கு ரூபாய் 235 கோடிகள் சம்பளம் என்று எல்லாம் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜன நாயகன் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











