விஜய்யின் ஜன நாயகன் லீக்.. விஜய் அப்பா முன் எழுந்த கேள்வி.. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதில் இதுவா?
சென்னை: நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல் துறை தரப்பில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் உள்ளனர். இப்படி இருக்கையில், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் போது ஜன நாயகன் லீக் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய்யின் அப்பா சந்திரசேகர் முன்னிலையிலேயே, தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவர் தமிழ்குமரன் பதில் அளித்தார்.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் தமிழ்குமரன் தலைவராக வெற்றி பெற்றார். அதன் பின்னர் சில வாரங்களுக்குள் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், பொதுக்குழு கூட்டப்படவில்லை. இப்படி இருக்கையில் ஏப்ரல் 26ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. ஏற்கனவே தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என தயாரிப்பாளர் சங்கத்திலேயே பல பிரிவுகள் இருந்தாலும், தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் தான் ஆதி என்பதால் மூத்த தயாரிப்பாளர்கள் பலரும் இந்த சங்கத்தில் தான் உள்ளனர்.

இப்படி இருக்கையில், இந்த சங்கத்தின் 2026ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து, நடைபெற்ற பொதுக்குழுவில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய்யின் அப்பா SA சந்திரசேகர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், " தாய் சங்கமான தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் மிகவும் வலுவாக மாறவேண்டும். அதை நான் பலரிடம் தனிப்பட்ட முறையில் சொல்லிக் கொண்டு இருந்துள்ளேன்.
தனியாக வந்து கவுன்சிலில் சண்டை போடுகிறீர்கள், அது நடக்கவில்லை, இது நடக்கவில்லை என்று முறையிடுகிறீர்கள், ஆனால் பொதுக்குழுவிற்கு பெரிய அளவில் சங்கத்தினர் வரவில்லை. தற்போது மக்கள் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்று பார்த்தீர்கள் தானே? மக்கள் நடந்து முடிந்த தமிழ்நாடு தேர்தலில் எவ்வளவு விழிப்புணர்வாக வாக்குச் செலுத்தி உள்ளார்கள். அதேபோல் சங்கத்தின் உறுப்பினர்கள் திரளாக சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதுதான் பொறுப்பில் உள்ளவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் " என்று பேசி இருந்தார்.

அதன் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஜன நாயகன் லீக் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, " இது தொடர்பாக நாங்கள் பொதுக்குழுவிலும் பேசினோம். இந்த தவறை எடிட்டரின் உதவியாளர்கள் செய்துள்ளதாக காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது. இதில் நேரடியாக பாதிக்கப்படுவது தயாரிப்பாளர் தான், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று புதிய தலைவர் தமிழ்குமரன் கூறினார். அப்போது விஜய்யின் அப்பா SA சந்திரசேகர் உடன் இருந்தார்.


Click it and Unblock the Notifications