விஜய்க்கு அந்த தகுதி இருக்கு.. ரசிகர்களிடம் சரணடைந்த ஜன நாயகன் தயாரிப்பாளர்.. மனம் நொந்து மன்னிப்பு வீடியோ!
சென்னை: நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் , நேற்று அதாவது ஜனவரி 9, 2026 அன்று திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பேசிய அவர், ரசிகர்களின் அளவற்ற அன்புக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி. மேலும், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், விரிவான தகவல்களை பகிர சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. என்னால் எல்லாவற்றையும் பகிர முடியவில்லை என்றாலும் முடிந்த அளவுக்கான தகவல்களை பகிர்கிறேன். கடந்த 2025 டிசம்பர் 18ஆம் தேதி 'ஜனநாயகன்' மத்திய தணிக்கை வாரியத்திற்கு அனுப்பப்பட்டது. குழு அதனை ஆய்வு செய்து, டிசம்பர் 22 அன்று சில மாற்றங்களை பரிந்துரைத்தது. 'UA 16+' சான்றிதழ் வழங்கப்படும் என மெயில் மூலம் தெரிவித்தனர்.

பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களைச் செய்து படத்தை மீண்டும் சமர்ப்பித்த போதும், சென்சார் சான்றிதழ் பெற முடியவில்லை. ரிலீஸ்க்கு சில நாட்களே இருந்த நிலையில், அதாவது ஜனவரி 5ஆம் தேதி மாலை, ஒரு புகாரின் பேரில் மறுஆய்வுக் குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டதாகத் எங்களுக்கு தகவல் கிடைத்தது.
படத்தை ரிலீஸ் செய்ய மிகக் குறைந்த நாட்களே இருக்கும் போது, புகார் கொடுத்தவர் குறித்த தெளிவின்மை காரணமாக, நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினோம். ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், திரைப்படத்திற்கு 'UA 16+' சான்றிதழை வழங்க உத்தரவிட்டது. ஆனால், தணிக்கை வாரியம் உடனடியாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. இதன் விளைவாக, சான்றிதழ் வழங்குவதற்கான நீதிமன்ற உத்தரவுக்கு தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு: இந்தக் கடினமான சூழலில் ஆதரவளித்த ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அனைவரிடத்திலும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதிலும், கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சில காரணங்களால் படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்யமுடியவில்லை.

விஜய்க்கு தகுதி இருக்கு: இது ஒரு சோதனையான காலகட்டம். கடந்த 33 ஆண்டுகளாக நடிகர் விஜய் தனது ரசிகர்களிடமிருந்து பெற்ற அளவற்ற அன்பு, திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஆகியவற்றிற்காக அவருக்கு ஓர் அற்புதமான பிரியாவிடை அளிக்கப்பட வேண்டும். அதற்கு அவர் அனைத்து வகையிலும் தகுதியானவர்.
நம்பிக்கை: ரசிகர்களின் பொறுமை, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத ஆதரவு எங்களுக்கு பலம் அளிக்கிறது. நீதித்துறை நடைமுறைகள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளதாகவும்" அந்த வீடியோவில் தயாரிப்பாளர் உருக்கமாகக் கூறினார். இவரது இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











