ஜனநாயகன் நாளை ரிலீஸ் இல்லை.. விஜய் ரசிகர்களுக்கு சோகம்.. சென்சார் பிரச்னையால் வந்த தலை வலி
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் ஆகுமா இல்லையா என்ற கேள்வியும் எழுந்திருந்தது. இந்நிலையில் இன்னமும் அந்தப் பிரச்னை தீராததால் நாளை ரிலீஸிலிருந்து தள்ளி போயிருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பு உருக்கமான ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் இதுவரை இல்லாத அவரது படங்களில் ஹைப்பை சந்தித்திருக்கிறது. ஏனெனில் இதுதான் அவரது கடைசி படம் என சொல்லப்பட்டிருக்கிறது. இதோடு திரைத்துறைக்கு அவர் குட் பை சொல்லவிருப்பதால் இப்படம் அவரது ரசிகர்களுக்கு ஒரு எமோஷனலாகவே மாறிவிட்டது. அதனால்தான் மலேசியாவில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவெல்லாம் அவ்வளவு சென்சேஷனல் ஆனது.
சென்சார் சான்றிதழ் பிரச்னை: திட்டமிட்டபடி ஜனவரி ஒன்பதாம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதற்கு படக்குழு முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டிருந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்கவில்லை. முதலில் அவர்கள் சொன்ன மாற்றத்தை செய்து படத்தை தயாரிப்பு நிறுவனம் அனுப்பவும் செய்தது. ஆனாலும் அவர்கள் சான்றிதழ் கொடுக்கவே இல்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாத ஜனநாயகன் தரப்பு நீதிமன்றத்துக்கு சென்றது.

நீதிமன்றம் அதிரடி: தயாரிப்பு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த டிசம்பர் 19ஆம் தேதியே அதிகாரிகள் படத்தை பார்த்துவிட்டார்கள். அவர்கள் சொன்ன மாற்றங்களை செய்த பிறகும் தணிக்கை குழுவினர் சான்றிதழ் கொடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்தது. இரண்டு தரப்பு வாதங்கள் அனைத்தையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒன்பதாம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், ஏன் ஜனநாயகன் ரிலீஸை தள்ளி வைக்கக்கூடாது எனவும் கேள்வி எழுப்பி தை பிறந்தால் வழி பிறக்குமே எனவும் தெரிவித்திருந்தார்.
நாளை தீர்ப்பு?: தொடர்ந்து, வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தணிக்கை குழு பிரச்னை இப்போதைக்கு ஓயாது என்பதை புரிந்துகொண்ட கேவிஎன் நிறுவனம் ஜனநாயகன் ரிலீஸை ஒன்பதாம் தேதியிலிருந்து ஒத்தி வைத்திருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில், "ஜனநாயகன் ரிலீஸ் தவிர்க்க முடியாத காரணங்களால் ஜனவரி ஒன்பதாம் தேதியிலிருந்து தள்ளிப்போகிறது. இதனை மன வேதனையுடன் ரசிகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
எளிதானது இல்லை: இந்தப் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு, உணர்வுகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த முடிவு எங்களுக்கு எளிதானது இல்லை. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். தொடர்ந்து வழங்கும் அன்பை கேட்டுக்கொள்கிறோம். அதுவே எங்களின் பலமாகும்" என தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கண்டிப்பாக விரைவில் படம் ரிலீஸாகும்போது யாராலும் மறக்க முடியாதபடி இதனை கொண்டாடுவதற்கும் மேலும் உறுதி எடுத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











