Vijay Makkal Iyakkam: நாடாளுமன்ற தேர்தலில் சீமானுக்கு ஆதரவா.. புஸ்ஸி ஆனந்தின் ரியாக்ஷனை பாருங்க!
சென்னை: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அடுத்தடுத்த சமூக செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்தி வருகிறது
சமீபத்தில் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகமான நிவாரண உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்ததை பார்க்க முடிந்தது.
அடுத்ததாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தில் செயல்பாடுகளை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். ஏராளமான ரசிகர்களின் இதயத்தில் இடம்பெற்றுள்ள விஜய்யின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அந்தப் படங்களை வசூல்ரீதியாக அவரது ரசிகர்கள் வெற்றி பெற செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு மாஸ் ரசிகர்களை கொண்டவராக விஜய் உள்ளார். இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.
ரசிகர்களை சந்தித்துவரும் விஜய்: இதனிடையே விஜய் மக்கள் இயக்கத்தின்மூலம் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வருகிறார் விஜய். சில மாதங்களுக்கு முன்பு அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளை சந்தித்து பரிசுகளை வழங்கியதை பார்க்க முடிந்தது. மேலும் நூலகம் உள்ளிட்டவற்றையும் துவங்கி மக்களை சென்றடையும் முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளார். அவ்வப்போது தன்னுடைய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்வதையும் வழக்கமாக்கியுள்ளார்.
விழுப்புரத்தில் ஆலோசனைக் கூட்டம்: அந்த வகையில் தற்போது விழுப்புரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்யப்பட்டுவரும் செயல்பாடுகளை இந்த கூட்டத்தில் விவாதித்ததாக தெரிவித்துள்ளார். நூலகம், சட்ட ஆலோசனை மையம் உள்ளிட்டவை குறித்து நிகழ்ச்சியில் விவாதம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர் சந்திப்பு: விஜய்யால் முன்னெடுக்கப்பட்ட இந்த செயல்திட்டங்கள் மக்களை சரியாக சென்றடையவில்லை என்று கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து விவாதித்துள்ளதாகவும் மேலும் இந்த புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யப்பட்ட நிவாரண உதவிகள் குறித்தும் இந்த விழுப்புரம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் விஜய் சொல்லுக்கிணங்க தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடக்கவுள்ளதாகவும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
புன்னகையுடன் நழுவிய புஸ்ஸி ஆனந்த்: தொடர்ந்து செய்தியாளர்கள் அடுத்தடுத்த கேள்விகளை அவரிடம் கேட்டனர். நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சிக்கொடி எதையாவது வடிவமைத்திருக்கிறீர்களா என்று புஸ்ஸி ஆனந்திடம் கேட்கப்பட்ட நிலையில் அவர் நன்றி என்று கூறி புன்னகை செய்தார். தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சீமானுக்கு ஆதரவளிக்குமா என்றும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கும் புன்னகையுடன் நன்றி தெரிவித்த புஸ்ஸி ஆனந்த் அங்கிருந்து நழுவியதை பார்க்க முடிந்தது. இதையடுத்து எல்லாவற்றிற்கும் புன்னகைதானா என அங்கிருந்தவர்கள் கூறியதை பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











