சாரிப்பா.. கல்யாணத்துக்கு வர முடியல.. ரோகிணி தியேட்டர் ஓனர் மகனை நேரில் சந்தித்து வாழ்த்திய விஜய்!
சென்னை: ரோகிணி தியேட்டர் ஓனர் பன்னீர் செல்வம் மகன் ரேவந்த் சரண் திருமணம் சென்னையில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் புடைசூழ நடைபெற்றது. ரேவந்த் சரண் திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவர் அட்சதை தூவி வாழ்த்திய காட்சிகள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகின.
ரேவந்த் சரண் தீவிரமான விஜய் ரசிகர் என்பதை அவரே பல யூடியூப் பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஆனால், திருமணத்துக்கு போன் மூலம் வாழ்த்து சொன்ன விஜய் நேரில் வரவில்லை.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்த அவர் தற்போது ரேவந்த் சரணை நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது ரேவந்த் வெளியிட்டுள்ளார்.
வெறித்தனமான விஜய் ரசிகர்: விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் வந்தால் நல்லது செய்வார் என பல பேட்டிகளில் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் முன்பே ரேவந்த் பேசியுள்ளார். மேலும், லியோ படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது விஜய் ரசிகர்கள் ரோகிணி தியேட்டர் இருக்கைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய போது கூட அவர் கோபப்படவில்லை. உடனடியாக தளபதி போன் போட்டு விசாரிச்சாரு அது போதும் என பேசியிருந்தார் ரேவந்த் சரண்.

ரேவந்த் சரண் திருமணம்: சென்னை கோயம்பேட்டில் உள்ள ரசிகர்களின் கோட்டை என்றழைக்கப்படும் ரோகிணி தியேட்டர் ஓனரான பன்னீர் செல்வம் செட்டியாரின் மகன் ரேவந்த் சரண் அந்த தியேட்டரை கவனித்து வருகிறார். இந்நிலையில், அவருடைய திருமணம் சென்னையில் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் நேரில் வந்து வாழ்த்தினர்.
ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை: ரேவந்த் சரண் திருமணத்திற்கும் சென்று மணமக்களுக்கு அட்சதை போட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தினார். அவர் வாழ்த்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் டிரெண்டாகின. அந்த திருமணத்துக்கு விஜய் வருவார் என ரசிகர்களை போலவே ரேவந்த் சரணும் எதிர்பார்த்தார். ஆனால், விஜய் வரவில்லை.

வாழ்த்திய விஜய்: இந்நிலையில், ரேவந்த் சரண் மற்றும் அவரது மனைவியை நடிகர் விஜய் நேரில் வாழ்த்தி உள்ளார். தற்போது அதன் புகைப்படத்தை ரேவந்த் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு "மை டியர் அண்ணா" என கேப்ஷன் கொடுத்துள்ளார். மனைவியின் முகத்தை ரேவந்த் சரண் அந்த போட்டோவில் காட்டவில்லை.

கோட் லுக்கில்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வித்தியாசமாக உருவாகி வரும் நிலையில், அந்த படத்தில் மீசை இல்லாமல் மகன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில், அதே லுக்கில் ரேவந்த் சரணை சந்தித்து விஜய் வாழ்த்தியுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











