Vijay Kutty Story: விஜய் சொன்ன முரட்டுக் காளை குட்டி ஸ்டோரி.. கடைசியில வெச்சாரு பாருங்க ஒரு டிவிஸ்ட்
வேலூர்: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தை வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தயார் செய்து வருகிறது. இந்நிலையில் அவர் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேசுவதற்கு முன்னரே ஒரு குட்டி ஸ்டோரி சொல்லித்தான் பேசினார்.
அதாவது அவர் சொன்ன குட்டி ஸ்டோரியாவது, " ஒரு ஊரில் ஒரு நாள் ரோடு உள்ளது. அந்த நாள் ரோடு வழக்கமாகவே மிகவும் பரபரப்பாக இயங்கும் பகுதி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. அப்படி இருக்கையில் அங்கு ஒரு ஜல்லிக்கட்டு முரட்டுக் காளை, சீறிக் கொண்டு, தனது காலால் மண்ணை வாரி இரைத்துக் கொண்டு உள்ளது. இப்படி இருக்கையில் பொதுமக்கள் அந்த காளையை அடக்க முடியாமல் வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.
முரட்டுக்காளை: அந்த காளையை அடக்கும் சிலரும் அன்றைய தினத்தில் அந்த ஊரில் இல்லை. இப்போது அந்த காளையை வழக்கமாக அடக்குபவர்களுடன் இருப்பவர்கள், தங்களை அனுபவசாலிகள் என்று சொல்லிக் கொண்டு அந்த காளையை அடக்க செல்கிறார்கள். ஆனால் அந்த காளை அவர்களை இடித்துத் தள்ளி விடுகிறது. என்ன செய்வது என்று அனைவரும் குழப்பத்தில் இருக்கும்போது, சின்ன பையன் ஒருவன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு காளையை நோக்கி முன்னேறுகிறான்.

சிறுவன்: அவன் காளையை நோக்கி போகும் போது ஏற்கனவே காளையை அடக்குகிறேன் என்று சென்று காளையிடம் முட்டு வாங்கிக் கொண்டு படுத்திருப்பவர்கள், டேய் தம்பி நாங்களே அனுபவசாலிகள், எங்களாலே முடியலே. நீ போய் செத்துப் போயிடாதே என்று கூறுகிறார்கள். ஆனாலும் அந்த சிறுவன் அந்த காளையை நோக்கி செல்கிறான். காளைக்கு அருகில் சென்றதும் தனது பாக்கெட்டில் வைத்திருந்த இரண்டு புல்லு கட்டுகளை எடுத்து, நீட்டினான். உடனே அந்த காளை மாடும் புல்லை சாப்பிடத் தொடங்கியது. அப்படியே காளையைத் தடவிக் கொடுத்துக் கொண்டு, அப்படியே வயல்வெளிக்கு அழைத்துச் சென்றுவிட்டான். இதைப் பார்த்த அந்த அனுபவசாலிகள் தலைகுனிந்து நின்றார்கள்.

அரசியல் களம்: இதைப் பார்த்த பெரியவர் ஒருவர் அந்த சிறுவனிடம் எப்படி நீ அந்த காளையை அடக்கினாய் என்று கேட்டார்கள். அதற்கு அந்த சிறுவனோ, எனக்கு அந்த காளையை பார்த்தபோது அது கோபத்தில் இருப்பது போலத் தெரியவில்லை, மாறாக அது பசியில் இருப்பது போல் தான் தெரிந்தது. அதனால் தான் நான் அதற்கு புல் கொடுத்து அடக்கி விட்டேன் என்று கூறினான். இதைக் கேட்ட அந்த பெரியவர் சொன்னாராம், இந்த சின்னவர்கள், பெரியவர்கள், அனுபவம் உள்ளவர்கள், அனுபவம் இல்லாதவர்கள் என்று எதுவும் முக்கியமில்லை. ஒரு பிரச்னை வரும்போது அதை ஒருவர் எப்படி கையாண்டு அதை சரி செய்கிறார் என்பது தான் முக்கியம். இந்த கதையில் அந்த காளை தான் தமிழ்நாடு அரசியல் களம் மக்கள், அந்த பெரியவர் தான் தமிழ்நாடு மக்கள், அந்த சிறுவன் தான் நமது தமிழக வெற்றிக் கழகம் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications