Vijay: இது மாணவர்கள் மீதான அக்கறை கிடையாது... விஜய்யின் அரசியல் ஆசை... வலுக்கும் எதிர்ப்பு
சென்னை: விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் நேற்று மாணவர்களை சந்தித்தார்.
10, 12ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணாக்கர்களுக்கு கல்வி விருது வழங்கினார்.
சுமார் 10 மணி நேரம் வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி மாணவர்கள் மீதான அக்கறையில் நடக்கவில்லை, இது விஜய்யின் அரசியல் ஆசை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விஜய்க்கு மாணவர்கள் மீது அக்கறை கிடையாது: லியோ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் விஜய் நேற்று மாணவர்களையும் அவரது பெற்றோர்களையும் சந்தித்தார். 234 தொகுதிகளிலும் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களை அவர் நேரில் சந்தித்தார். பின்னர் அவர்களுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த கல்வி விருது வழங்கும் விழா, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முக்கியமாக இந்நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் இறுதிவரை அரசியல் சாயமும் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய், "காடு இருந்தா எடுத்துக்குவானுங்க, பணம் இருந்தா புடுங்கிடுவானுங்க, படிப்ப மட்டும் எடுத்துக்கவே முடியாது" என்ற அசுரன் பட வசனம் தன்னை பாதித்ததாகக் கூறினார்.
அதேபோல் பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களை மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும் என்றார். மேலும் வாக்களிக்க பணம் வாங்க வேண்டாம், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்கள் என ஒவ்வொரு வார்த்தையிலும் அரசியல் நெடி இருந்தது. விஜய்யின் இந்த பேச்சு பலரிடம் வரவேற்பைப் பெற்றாலும் பெரும்பாலானோர் விமர்சித்து வருகின்றனர்.

அதாவது கல்வியில் முதல் மூன்று இடங்கள் என்றால், அது மாவட்ட அளவில் அல்லது வருவாய் மாவட்ட அளவில் தானே இருக்க வேண்டும். அது என்ன தொகுதி வாரியாக தேர்வு செய்வது. உண்மையில் விஜய்க்கு மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேசன் போல செயல்பட்டிருக்க வேண்டும். இதன்மூலம் விஜய்க்கு மாணவர்களை விடவும் அரசியலில் தான் அதிக ஆர்வம் உள்ளது என கூறியுள்ளனர்.
அப்படி அரசியலில் ஆர்வம் இருந்தாலும், கோடிகளில் சம்பளம் வாங்கும் அவர் ஏழைகளிடம் ஓட்டுப்போட பணம் வாங்காதே என்கிறார். ஆனால், அவருக்கு இந்தியாவின் அரசியல் குறித்து தெரியவில்லை. சாமி, ஜாதி, மதம், இனம் மொழியை முன்னிறுத்தி அரசியல் செய்யக் கூடாது என்றுதானே கூறியிருக்க வேண்டும் என பலரும் விமர்சித்துள்ளனர். அதேபோல், அம்பேத்கர், பெரியார், காமராஜரை படிக்கச் சொல்லும் விஜய், அதனை தானும் செய்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
விஜய் அம்பேத்கரை படித்திருந்தால் வேங்கைவயல் அநியாயத்தைக் கண்டித்திருப்பார். பெரியாரைப் படித்திருந்தால் சினிமாவில் நாயகிகளை இழிவுபடுத்தும் காட்சிகளில், பாடல்களில் நடித்திருக்க மாட்டார். காமராசரை படித்திருந்தால் நீட், நெக்ஸ்ட் போன்ற புதிய கல்விக் கொள்கையை கண்டித்திருப்பார். தன்னை கிறித்துவர் எனக்கூறும் பாஜகவின் மதவெறி அரசியலை எதிர்த்து விஜய் இதுவரை எதுவும் கூறியது கிடையாது. பிரகாஷ்ராஜ், டாப்ஸி, சித்தார்த் போன்றவர்கள் அளவிற்குக் கூட விஜய் கிடையாது என கூறியுள்ளனர்.
மேலும், விஜய்யிடம் சினிமா கவர்ச்சி இருந்தாலும் அது மட்டும் அரசியலுக்கு உதவாது. நடிகர்களிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதற்கும் அரசியல் தலைவரிடம் மக்கள் எதிர்பார்ப்பதற்கும் இடைவெளிகள் உள்ளன. அவருக்கு லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு எழுதிக்கொடுக்கும் வசனத்தைப் படிக்கவே நேரம் சரியாக இருக்கிறது என கடுமையாக விமர்சித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











