Leo Vijay - உங்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும்.. எனக்கும் அப்படித்தான்.. ட்ரெண்டாகும் விஜய் வீடியோ
சென்னை: Leo Audio Launch (லியோ ஆடியோ லான்ச்) லியோ ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டிருக்கும் சூழலில் விஜய் பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி இறுதிக்கட்ட பணிகள் மும்முரமடைந்துள்ளன. அதன்படி படத்திலிருந்து வரிசையாக போஸ்டர்கள் வெளியாகின. அவை அனைத்துக்குமே ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்தனர். இந்த சூழலில் ஆடியோ வெளியீட்டு விழாவானது செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடப்பதாக இருந்தது.

திடீர் ரத்து: அதற்காக பாஸ்கள் முதல் மேடைகள் அமைப்பதுவரையிலான ஏற்பாடுகள் தீவிரமடைந்தன. விஜய்யின் சமீபத்திய அரசியல் மூவ்கள், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன குட்டி கதை விவகாரம் ஆகியவைகளை எல்லாம் மனதில் வைத்து தளபதி ரசிகர்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை ரொம்பவே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதிக பாஸ்கள் கோரிக்கை, பாதுகாப்பு கட்டுப்பாடுகளை காரணம் காட்டி இந்த விழா நடக்காது என செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்தது.
இதுதான் காரணமா?: இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. மேலும் தயாரிப்பு நிறுவனம் சொன்னதெல்லாம் காரணமே இல்லை. இதற்கு பின்னால் கண்டிப்பாக அரசியல் அழுத்தம் ஏதோ இருந்திருக்கிறது. விஜய் தொடர்ந்து அடக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார் என்று சில பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் தொடர்ந்து பேசிவருகின்றனர். ஆனால் விஜய் வழக்கம் போல் சைலெண்ட் மோட்தான்.
வீடியோ உண்டா?: ஆடியோ வெளியீட்டு விழா நடக்காமல் போனதால் விஜய் ஏதாவது பேசி வீடியோ வெளியிட வேண்டும். அப்போது அதை தாங்கள் பயங்கரமாக ட்ரெண்டாக்குவோம் அதன் மூலம் தளபதியின் கெத்தை அனைவரும் புரிந்துகொள்ளட்டும் என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கின்றனர். மேலும் We Stand With Leo என்ற ஹேஷ்டேக்கையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கியுள்ளனர்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் லியோ ஆடியோ வெளியீட்டு விழா நடக்காத சூழலில் மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அதில் பேசிய அவர், "இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்கிற ஏமாற்றமும் வருத்தமும் உங்களுக்கு எவ்வளவு இருக்குதோ அதைவிட அதிகமாகவே எனக்கும் இருக்கு. அரை மனதுடன் தான் இந்த விழாவுக்கு நான் ஒத்துக்கொண்டேன். ஆனால் முழு மனதோடு நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. சாரி.
என்ன பண்றது உண்மையா இருக்க வேண்டும்னா சில நேரத்துல ஊமையா இருக்க வேண்டியிருக்கும்" என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த பேச்சும் தற்போது லியோவுக்கு நடந்திருக்கும் விஷயமும் ஒத்துப்போவதாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இதற்கிடையே லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று மாலை வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











