Vijay Paid Tribute To Vijayakanth - அய்யோ செந்தூரப்பாண்டி அண்ணே.. விஜயகாந்த் உடலை பார்த்து கலங்கி நின்ற விஜய்
சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நடிகர் விஜய் நேரில் வந்து தனது அஞ்சலியை செலுத்தி கலங்கியபடி நின்றார்.
விஜயகாந்த் பிரபலமான நடிகர். கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் நடித்து ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்படுபவர். நடிகராக மட்டுமின்றி தேமுதிக என்ற கட்சியை 2005ஆம் ஆண்டு ஆரம்பித்து 2006 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார். அதனையடுத்து 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.

உடல்நலக்குறைவு: இந்த சூழலில் சில காரணங்களால் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து அமெரிக்காவுக்கு சென்ற அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு தமிழ்நாடு திரும்பினார். இருந்தாலும் அவரால் முன்னர் போல் ஆக்டிவ்வாக செயல்பட முடியவில்லை. எனவே முழுநேர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வில் இருந்தார். பண்டிகை காலங்களில் தொண்டர்களை சந்திப்பை மட்டும் வழக்கமாக வைத்திருந்தார் விஜயகாந்த். இந்த சூழலில் உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்தார்.
விஜய் நேரில் அஞ்சலி: இந்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அந்தவகையில் நடிகர் விஜய்யும் நள்ளிரவு நேரில் விஜயகாந்துக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். உச்சக்கட்ட சோகத்தோடு வந்த விஜய்; விஜயகாந்த்தின் உடலை சில நொடிகள் பார்த்தபடியே நின்றார். அப்போது அவரது கண்கள் கலங்கியிருந்தன. மேலும் பிரேமலதாவுக்கும், விஜயகாந்த்தின் மகன்களுக்கும் தனது ஆறுதலை சொல்லிவிட்டு சென்றார்.
நன்றி மறக்காத விஜய்: விஜய் கரியரை ஆரம்பித்தபோது அவரது வளர்ச்சிக்காக விஜயகாந்த் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்துக்கொடுத்தார். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாதபோது விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அதுமட்டுமின்றி விஜயகாந்த்தின் இறப்புக்கு விஜய் வருவாரா என்ற சந்தேகத்தையும் ஒரு சிலர் எழுப்பினர். ஆனால் தான் ஒன்றும் நன்றி மறந்தவன் இல்லை என்பதை இதன் மூலம் விஜய் உணர்த்தியிருக்கிறார். விஜய் கலங்கி நின்றதை பார்த்த ரசிகர்களும் கலங்கினர்.
உயிரிழப்பு: முன்னதாக விஜயகாந்த்துக்கு சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையால் அவர் உடல்நலம் தேறி வீடு திரும்பினார். மேலும் தேமுதிக கட்சியின் பொதுக்குழுவிலும் அவர் கலந்துகொண்டார். ஆனால் நேற்று முன் தினம் மாலை அவருக்கு நுரையீரல் அழற்சி ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த சூழலில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாடையும், திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடல் முதலில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு தற்போது சென்னை தீவுத்திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications











