மனோஜ் பாரதிராஜா உயிரிழப்பு.. அஞ்சலி செலுத்திய விஜய்.. பாரதிராஜாவுக்கு ஆறுதல்
சென்னை: பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று மாலை தனது வீட்டில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பாரதிராஜாவின் குடும்பத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திரைத்துறையை சேர்ந்த பலரும் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவரும் சூழலில் நடிகர் விஜய்யும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் மனோஜின் உடல் அருகே அமர்ந்திருந்த பாரதிராஜாவுக்கு தனது ஆறுதலையும் தெரிவித்தார் அவர்.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ் மஹால் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஹீரோவாக அவருக்கு விருப்பமில்லையென்றாலும் தன்னுடைய தந்தையின் ஆசைக்காக நடிக்க ஒத்துக்கொண்டார். ஆனால் அந்தப் படம் அவருக்கு பெரிய ஹிட்டை கொடுக்கவில்லை. அடுத்ததாக அவர் நடித்த சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், கடல் பூக்கள், ஈர நிலம், அன்னக்கொடி உள்ளிட்ட படங்களும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் அவர் மட்டுமின்றி பாரதிராஜாவும் கொஞ்சம் அப்செட்டாகத்தான் இருந்தார்.
இயக்குநர் மனோஜ்: ஹீரோவாகத்தான் மனோஜுக்கு ஆசையில்லையே ஒழிய இயக்குநராக வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. அதற்காக பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் அவர் நடிக்க வந்துவிட்டார். தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த அவர் கடந்த 2023ஆம் ஆண்டு மார்கழி திங்கள் என்கிற படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் பாரதிராஜாவையும் நடிக்க வைத்திருந்தார் அவர். படம் சரியாக போகவில்லை.

குணசித்திர வேடம்: ஒருபக்கம் இயக்குநரானாலும் மறுபக்கம் நடிப்பு அவரை விடவில்லை. அதன்படி ஈஸ்வரன், மாநாடு, கொம்பன் உள்ளிட்ட படங்களில் கேரக்டர் ரோலை ஏற்றிருந்தார். அந்தப் படங்களில் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த ரோலின் தன்மையை அறிந்து சிறப்பாகவே நடித்திருந்தார். ஹீரோவாகத்தான் வெல்ல முடியவில்லை; குணசித்திர நடிகராக தனது மகன் அடையாளத்தை பிடித்துவிடுவார் என்று பாரதிராஜாவும் நிம்மதியோடு இருக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழப்பு: இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு இதயத்தில் திடீரென பிரச்னை வந்ததன் காரணமாக சில நாட்களுக்கு முன்பு அவருக்கு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வெற்றிகரமாக அந்த அறுவை சிகிச்சை முடிந்ததால் இனி அவரது உடல்நிலையில் எந்தப் பிரச்னையும் வராது என்று அவரது குடும்பத்தினர் நம்பிக்கொண்டிருந்தார்கள். அவரும் நீலாங்கரையில் இருக்கும் தனது வீட்டில் ஓய்வெடுத்தார். ஆனால் திடீரென நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார்.
இன்று இறுதி அஞ்சலி: அவருக்கு வயது 48 ஆகும். நந்தனா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். உயிரிழந்த மனோஜின் உடல் அஞ்சலிக்காக நீலாங்கரையில் இருக்கும் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. முதலில் சொந்த ஊருக்கு அவரது உடல் எடுத்து செல்லப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் சென்னைதான் அனைவரும் வருவதற்கு வசதி என்பதால் இங்கேயே அவரது இறுதி சடங்கை முடிக்க குடும்பத்தினர் முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படி இன்று மாலை 4.30 மணிக்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதி சடங்கு நடக்கிறது.
விஜய் அஞ்சலி: மனோஜின் உடலுக்கு சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது வீடு நடிகர் விஜய்யின் வீட்டுக்கு அருகிலேயே இருப்பதால் அவர் எப்போது வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அவர் மனோஜின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் இடிந்துபோய் அமர்ந்திருந்த பாரதிராஜாவுக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











