விஜய்யே காதை பொத்துறாரு.. விசில் சத்தம் விண்னை பிளக்குது.. செம வைபில் இருக்காங்களே
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கும் விஜய் இந்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். இதுவரை பெரிய அளவில் அவருடன் கூட்டணி வைக்க இதர கட்சிகள் வரவில்லை. இருந்தாலும் ரொம்பவே நம்பிக்கையோடு அவரது ரசிகர்களும், தொண்டர்களும் காணப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று தவெக செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் நடக்கிறது.
அரசியலுக்கு விஜய் வர வேண்டும் என்ற அவரது ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சில வருடங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் அவர். கட்சி ஆரம்பித்ததிலிருந்து அவரது டார்கெட் முழுக்க முழுக்க திமுகவை நோக்கியே இருக்கிறது. இதனால் அவர் பாஜகவின் பி டீம் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. ஆனாலும் அவர் அதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் திமுகவை காட்டமாக அட்டாக் செய்துவருகிறார்.
சிபிஐ வளையத்தில் விஜய்: இது ஒருபக்கம் இருக்க 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் அவர் நடத்திய அரசியல் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கரூருக்கு சென்றார். அப்போது அவர் தாமதமாக வந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக 41 பேர் உயிரிழந்தார்கள். அந்த விவகாரம் பல கட்டங்களை தாண்டி இப்போது சிபிஐ வசம் இருக்கிறது. சமீபத்தில்தான் இரண்டு முறை விஜய் சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரானார்.

ஜனநாயகன் பிரச்னை: இதற்கிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்காததால் படம் ரிலீஸாகவில்லை. எவ்வளவோ முயன்றும் அவர்கள் தர மறுத்ததால் நீதிமன்றத்துக்கு சென்றது பட தயாரிப்பு நிறுவனம். அங்கும் இந்த வழக்கு ஏகப்பட்ட திருப்பங்களை சந்தித்துவருகிறது. இன்னும் சில நாட்களில் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கவிருக்கிறது நீதிமன்றம். எனவே அதை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.
விசில் சின்னம்: தொடர்ந்து விஜய்க்கு அழுத்தங்கள் வந்துகொண்டிருந்தாலும்; அவர்களுக்கு சந்தோஷம் தரும் விதமாக தேர்தல் ஆணையம் தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கியிருக்கிறது. கோட் படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான விசில் போடு பாடலை இதோடு கனெக்ட் செய்து கொண்டாடிவருகிறார்கள் ரசிகர்கள். விஜய்யும் உற்சாகத்தோடு பதிவு போட்டார். மேலும் தனது சோஷியல் மீடியாவின் கவர் ஃபோட்டோவிலும் விசிலை வைத்திருக்கிறார்.
செயல் வீரர்கள் கூட்டம்: இந்நிலையில் தவெக கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அதில் விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக அங்கு கூடியிருந்த தொண்டர்கள் விசிலை ஊதி சத்தம் எழுப்பினார்கள். அதுமட்டுமின்றி TVK, TVK என்று சில நிமிடங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இதனை பார்த்து விஜய் க்யூட்டாக தனது இரண்டு கைகளையும் காதில் வைத்தபடி சில நொடிகள் நின்றார். அந்த வீடியோதான் இப்போது ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











