12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்.. விஜய் சொல்லியிருப்பதை பாருங்க.. என்ன சொல்லியிருக்கிறார்?
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்பதற்கான வாய்ப்புகள் விஜய்க்கு கைகூடி வந்திருக்கின்றன. ஆனால் இன்னமும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஆட்சியமைக்க முடியவில்லை. சூழல் இப்படி இருக்க இன்று தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின. அதுதொடர்பாக விஜய் தன் எக்ஸ் பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று வந்திருக்கின்றன. மாணவர்கள் 93 விழுக்காடும், மாணவிகல் 97 விழுக்காடும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்வு முடிவுகள் வந்ததையடுத்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாணவர்கள், மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆறுதல் சொல்லி தெம்பும் ஊட்டினார்கள். இந்நிலையில் தவெக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சராக மாற வாய்ப்புள்ளவருமான விஜய் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

என்ன பதிவு?: அவர் தன் எக்ஸ் பக்கத்தில், "பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
விஜய்யை சுற்றி பிரச்னைகள்: உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்! நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது ட்வீட் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதற்கிடையே விஜய்யின் கட்சியான தவெக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் 113ஆக அக்கட்சியின் பலம் இருக்கிறது. இன்னும் ஐந்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் விஜய் இனிமேல் ஐந்து வருடங்களுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர்.
நடக்குமா அது?: ஆனால் அதில்தான் ஏகப்பட்ட சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. அதாவது பாஜகவை விரும்பாத அவர் காங்கிரஸ் ஆதரவை பெற்றுவிட்டார். அதேசமயம் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவையும் எதிர்பார்க்கிறார். ஆனால் திருமாவளவனும், கம்யூனிஸ்ட் தலைமையும் தவெகவுக்கு தங்களது ஆதரவை கொடுப்பதற்கு தயங்கி வருகிறார்கள். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் திமுக சொன்னால் ஆதரவு கொடுப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முடிவு: அநேகமாக அத்தனை களேபரங்களும் இன்று மாலை முடிவுக்கு வந்துவிடும் என்றே தெரிகிறது. இதற்கிடையே விஜய்யை ஒழிப்பதற்கு திமுகவும், அதிமுகவும் ஒன்று சேரப்போகிறார்கள் என்றும் ஒரு தகவல் ஓடுகிறது. ஆனால் அப்படியெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை; ஒருவேளை அப்படி நடந்தால் அது இரண்டு கட்சிகளுக்கான அழிவின் முதற்புள்ளியாக இருக்கும் என மூத்த அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
