விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா.. சாதனை படைக்கும் போல.. இப்பவே இப்படியா?.. சும்மா அள்ளுது
சென்னை: விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கவிருக்கிறது. நிகழ்ச்சி நடக்கவிருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் குழும ஆரம்பித்திருக்கிறார்கள். எந்த நாடு சென்றாலும் அங்கே தளபதிதான் மாஸ் என பல வீடியோக்களை அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்தவண்ணம் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோட் படத்துக்கு பிறகு ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். இந்த தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவராக பார்க்கப்படும் ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பகவந்த் கேசரியின் ரீமேக்தான் இந்தப் படம் என்று சொல்லப்பட்டாலும்; அப்படியெல்லாம் அப்பட்டமாக காப்பி அடிக்கக்கூடியவர் அவர் இல்லை என்பதால் படத்தின் மீது அதீத ஆவல் எழுந்திருக்கிறது. அதிலும் இதுதான் விஜய்யின் கடைசி படம் என்றும் சொல்லப்படுகிறது.
ரசிகர்கள் ஆயத்தம்: இதன் காரணமாக ஜனநாயகன் படத்தை ஒரு திருவிழா போல் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகியிருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள். இதற்கிடையே படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கவிருக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் மூன்று மணிக்கு தளபதி திருவிழா கான்செர்ட் ஆரம்பிக்கிறது. அதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு இசை வெளியீட்டு விழா நடக்கிறது.

படையெடுத்த பிரபலங்கள்: இதுதான் விஜய்யின் கடைசி ஆடியோ லான்ச் என்பதால் பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இப்போதுவரை படக்குழுவினர் தவிர்த்து பிரபுதேவா, அட்லீ, நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ், நாசர், கதிர் உள்ளிட்டோர் மலேசியாவுக்கு சென்றிருக்கிறார்கள். மேலும் பல பின்னணி பாடகர்களும், பாடகிகளும் இந்த கான்செர்ட்டில் பாடல்களை பாடவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் பலம்: பிரபலங்கள் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ரசிகர்களின் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. மலேசிய வாழ் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டிலிருந்தும் தளபதி ரசிகர்கள் விமானத்தை பிடித்து மலேசியாவுக்கு சென்றிருக்கிறார்கள். அந்த நாட்டில் விஜய்க்கு இவ்வளவு மாஸ் இருக்கிறது என்பதை நேற்றிலிருந்து அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து சோஷியல் மீடியாக்கள் மூலம் உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.
சாதனை படைக்குமா?: நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சில மணி நேரத்துக்கு முன்னதாகவே ஸ்டேடியத்துக்கு ரசிகர்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள். இப்போதே மைதானத்தில் இருக்கும் பாதி இருக்கைகள் நிரம்பிவிட்டன. கண்டிப்பாக மாலைக்குள் ஸ்டேடியும் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் ஒரு லட்சம் பேர்வரை அமரலாம். இந்த நிகழ்ச்சிக்கு 80,000 பேர்வரை வருவார்கள் என்று கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போதைய நிலைமைப்படி நிச்சயம் 90,000க்கும் மேற்பட்டோர் வரலாம் என்று தெரிகிறது. சில வருடங்களுக்கு முன்பு மலேசியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இதே மைதானத்தில் நடந்த கால்பந்து போட்டியை காண்பதற்கு 96,000 பேர் வந்திருந்ததுதான் சாதனையாக இருந்தது. தற்போது கூடும் கூட்டத்தை பார்க்கையில் அந்த சாதனையை ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா முறியடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











