புண்படுத்திட்டே இருக்கீங்களே.. விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு வந்த நிலைமை பாருங்க.. அது நடக்கவே இல்லை
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதியே ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகளால் படத்துக்கு சிக்கல் வந்தது. எப்படியாவது திட்டமிட்டபடி ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று பல வேலைகளை பார்த்தது படக்குழு. ஆனால் எதுவும் கைகொடுக்கவில்லை. இதனால் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு; மறு தணிக்கை குழுவுக்கு படத்தை அனுப்பவும் செய்தது. இதனால் பிரச்னை சீக்கிரமே முடிந்துவிடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது.
சினிமாவில் அதிகம் வசூல் செய்யும் ஹீரோக்களில் ஒருவரான விஜய்; தனது ஆசைப்படியும், ரசிகர்களின் விருப்பப்படியும் அரசியலுக்கு வந்திருக்கிறார். இதன் காரணமாக திரைத்துறையிலிருந்து விலகும் முடிவையும் அவர் எடுத்தார். அதன்படி ஜனநாயகன் படம்தான் அவரது கடைசி படம் என்றும் சொல்லப்பட்டது. இத்தனை வருடங்கள் தங்களை என்ட்டெர்டெயின் செய்தவரின் கடைசி படத்தை எமோஷனாகவே பார்த்தார்கள் ரசிகர்கள். எனவே கண்டிப்பாக படத்தை மெகா ஹிட்டாக்கிட வேண்டும் என்று முழு ஆர்வத்தோடு இருந்தார்கள்.

படத்துக்கு வந்த சிக்கல்: ஜனவரி ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாவதாக இருந்தது. பராசக்தி பத்தாம் தேதி வந்தது. எனவே எஸ்கேவுக்கும், விஜய்க்கும் இந்தப் பொங்கல் ரேஸ் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்சார் அதிகாரிகள் ஜனநாயகன் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டார்கள். படத்தில் மதத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும்; சில காட்சிகளை மாற்ற வேண்டும் என அவர்கள் சொன்னதாகவும் கூறப்பட்டது.
நீதிமன்றம் சென்ற படக்குழு: சென்சார் அதிகாரிகள் இப்படி செய்துவிட்டதை அடுத்து படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. தனி நீதிபதி விசாரித்து படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவிட்டார். ஆனால் சென்சார் தரப்போ உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றது. அங்கே தனி நீதிபதி அளித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது படக்குழு. அங்கேயும் நீதிமன்றம் கைவிரித்து; நீங்கள் உயர் நீதிமன்றத்துக்கே செல்லுங்கள் என உத்தரவிட; வாழ்க்கை ஒரு வட்டம் என்பது மீண்டும் நிரூபனமானது. இனிமேலும் நீதிமன்றத்தால் தங்களுக்கு ஒன்றும் ஆகாது என்று முடிவு செய்து வழக்கையும் வாபஸ் வாங்கிவிட்டது.
மறு தணிக்கைக்கு படம்: வழக்கை வாபஸ் வாங்கியதை அடுத்து மறு தணிக்கைக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது. கண்டிப்பாக இந்த முறை அதிகாரிகள் எந்த சிக்கலும் இல்லாமல் படத்தை பார்த்துவிடுவார்கள்; நிச்சயம் ரிலீஸ் செய்துவிடலாம் என்று ஆர்வத்தில் இருந்தது பட தயாரிப்பு நிறுவனம். ரசிகர்களும் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். மார்ச் ஒன்பதாம் தேதி அவர்கள் பார்ப்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் தணிக்கை குழுவில் இருக்கும் உறுப்பினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் படம் தணிக்கை செய்யப்படவில்லை.
இன்றும் இல்லை: அதனையடுத்து மார்ச் 17ஆம் தேதி (இன்று) மறு தணிக்கை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றாவது அத்தனை பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைத்துவிடும் என்று விஜய்யின் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால் இன்றும் மறு தணிக்கை செய்யப்படவில்லை. இதன் காரணமாக ரசிகர்கள் உச்சக்கட்ட சோகமடைந்திருக்கிறார்கள். இப்படி புண்படுத்திட்டே இருக்கீங்களே என்று புலம்பவும் ஆரம்பித்துவிட்டார்கள். ஜனநாயகனுக்கு எப்போதுதான் விடிவு காலம் வருமோ? பொறுத்திருந்து பார்ப்போம்..


Click it and Unblock the Notifications















