ஜனநாயகன் லீக்கானது எங்களுக்கு அதிர்ச்சியே இல்லை.. என்ன எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படி சொல்லிட்டாரு?
சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அண்மையில் ஆன்லைனில் லீக்கானது. அது இந்திய திரைத்துறையிலேயே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அரசியலுக்கு வந்திருப்பதால் அவரை காலி செய்யத்தான் திமுகவும், பாஜகவும் சேர்ந்து இப்படி படுபாதக செயலை செய்ததாக தவெகவினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் கசிந்தது குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார் எஸ்.ஏ.சி.
அரசியல் பிரவேசம் செய்திருக்கும் விஜய் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு திரைத்துறையிலிருந்து விலகிவிட முடிவெடுத்திருக்கிறார். எனவே ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் படம்தான் அவரது கடைசி படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக இப்படத்தை பண்டிகை போல் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் தயாராக இருந்தார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதமே படம் ரிலீஸாவதாக இருந்தது. சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டதால் படம் ரிலீஸாகவில்லை.

நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம்: அதனையடுத்து நீதிமன்றத்துக்கு பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் சென்றது. தனி நீதிபதி சாதகமான தீர்ப்பை வழங்கினாலும் அடுத்தடுத்த மேல் முறையீடுகளில் பாதகமான சூழலே நிலவியது. இனிமேலும் நீதிமன்றத்தில் இருந்தால் கண்டிப்பாக எதுவும் பாசிட்டிவ்வாக நடக்காது என்பதை உணர்ந்துகொண்டு வழக்கை வாபஸ் பெற்று மறு தணிக்கைக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதும் சென்சார் அதிகாரிகள் படத்தை பார்க்காமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
ஜனநாயகன் லீக்: இப்படிப்பட்ட சூழலில் சில வாரங்களுக்கு முன்பு ஜனநாயகன் திரைப்படம் ஆன்லைனில் லீக்காகிவிட்டது. திரையரங்குக்கே வராத ஒரு படம் எப்படி லீக்கானது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. வெளியான ப்ரிண்ட்டில் எடிட் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால்; இதனை எடிட்டர் தரப்புதான் ரிலீஸ் செய்திருக்கும்; சொல்லப்போனால் விஜய் தரப்பேகூட இதை செய்திருக்கலாம் என்று சகட்டுமேனிக்கு பேச்சுக்கள் எழுந்தன. பட தொகுப்பாளர்தான் வெளியிட்டார் என்பதை எடிட்டர்கள் சங்கமும், ஃபெப்சி சங்கமும் திட்டவட்டமாக மறுத்துவிட்டன.
அதிரடியாக நடந்த கைது: இது ஒருபக்கம் இருக்க திமுகவும், பாஜகவும் சேர்ந்துதான் படத்தை கசியவிட்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டை தவெகவினர் கூறினார்கள். இந்தப் படத்தை யார் லீக் செய்தார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் காவல் துறையினரும் முழு முனைப்போடு செயல்பாட்டார்கள். அதன் பலனாக ஃப்ரீலான்ஸ் எடிட்டர்தான் இப்படி ஒரு செயலை செய்திருக்கிறார் என்பதை கண்டுபிடித்து கைதும் செய்யப்பட்டார். மேலும் ஆறு பேரை அதிரடியாக கைது செய்தார்கள்.
எஸ்.ஏ.சி பேட்டி: இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ஜனநாயகன் திரைப்படத்துக்கு விஜய் கையெழுத்து போடும்போது என்ன சொன்னார் என்பதை அவரே ஆடியோ லான்ச்சில் சொல்லியிருப்பார். பிரச்னைகள் வரும் என்று தெரிந்துதான் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என சொல்லியிருக்கிறார். அது எங்களுக்கு பெரிய ஷாக்கோ, அதிர்ச்சியோ இல்லை. ஒருவரை மன ரீதியாக அடிக்கலாம். அடுத்ததாக பொருளாதார ரீதியாக அடிக்கலாம். ஜனநாயகன் லீக்கானதற்கு எதிர்க்கட்சியினர்தான் காரணம் என்பது எல்லோருக்கும் இயல்பாக வரக்கூடிய சந்தேகம்தான். எனக்கும் அந்த சந்தேகம்தான். படம் ரிலீஸாகியிருந்தால்தான் அதிர்ச்சியாகியிருப்போம்" என்றார்.


Click it and Unblock the Notifications
