லியோவுக்கு போட்டியாக ஜவான்... விஜய்யுடன் மோதிப் பார்க்க துடிக்கும் அட்லீ: இதுதான் காரணமா?
சென்னை: ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் ஜூன் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது ஜவான் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியாததால், ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும், விஜய்யின் லியோ படத்திற்குப் போட்டியாக ஜவானை களமிறக்க அட்லீ முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கான் - அட்லீ காம்போ
ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான பதான் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. பாய்காட் பிரசாரங்களை கடந்து பதான் வெற்றிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கோலிவுட்டில் இருந்து முதன்முறையாக பாலிவுட் பக்கம் சென்றுள்ள அட்லீ, இந்தப் படத்தை இயக்கி வருகிறார். மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் ஜூன் 2ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ரிலீஸ் தேதியில் மாற்றம்
ஷாருக்கானின் ரெட் சில்லர்ஸ் நிறுவனம் தான் ஜவான் படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில், ஜவான் படத்தின் ஷூட்டிங்கை சொன்னபடி முடிக்காமல், அட்லீ ஜவ்வாக இழுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜவான் படத்தை ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 2ம் தேதி ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பட்ஜெட்டில் பதம் பார்த்த அட்லீ, தற்போது படப்பிடிப்பிலும் லேட் செய்துவிட்டதால் ஷாருக்கான் கொஞ்சம் டென்ஷனாகவே இருக்கிறாராம்.

லியோவுடன் களமிறங்கும் ஜவான்
அதேநேரம் ஷூட்டிங் சீக்கிரம் முடித்துவிட்டாலும் கிராபிக்ஸ் ஒர்க் உட்பட போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் இருப்பதால் ஜவான் ரிலீஸ் தள்ளிப்போவது கன்ஃபார்ம் என்றே சொல்லப்படுகிறது. இதனால், ஜவான் படத்திற்கான புதிய ரிலீஸ் தேதியை அட்லீ முடிவு செய்துள்ளாராம். அதன்படி ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி ஜவான் வெளியாகலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன. அதே தேதியில் தான் விஜய்யின் லியோ திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அட்லீயின் மாஸ்டர் ப்ளான்
விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என மாஸ் ஹிட் கொடுத்த அட்லீ, அடுத்ததாக தளபதி 68 படத்தையும் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் விஜய்யின் லியோவுக்கு போட்டியாகவே ஜவான் படத்தை ரிலீஸ் செய்து கெத்து காட்ட நினைத்துள்ளாராம் அட்லீ. இதனால், அவரது மார்க்கெட் வேல்யூவும் அதிகமாகும் என கணக்குப் போட்டுள்ளார். ஆனாலும், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

விரைவில் ஜவான் டீசர்
இதனிடையே ஜவான் படத்தில் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், அவர் இந்த வாய்ப்பை ஏற்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், அல்லு அர்ஜுனுக்கு பதிலாக சஞ்சய் தத் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிருத்தும் தான் இசையமைத்த படங்களிலேயே ஜவான் தான் பெஸ்ட் என உறுதியாக கூறியுள்ளார். இதனால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











