லண்டன் பயணம் செல்லும் கத்தி படக்குழு... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய்
சென்னை: கத்தி படம் தொடங்கப்பட்டதில் இருந்தே அப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பினாமி இந்தப் படத்தைத் தயாரிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. பிறகு, பினாமி இல்லை அவரது தொழில் பார்ட்னர் தயாரிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த செய்திகள் வெளியானதும் உலகத் தமிழர்களிடமிருந்து கத்தி படத்துக்கும், விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் எழுந்தன.

புலம் பெயர்ந்த தமிழர்கள்
குறிப்பாக, புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மத்தியில் கொதிப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில், கத்தி படத்திற்கு சிக்கல் அதிகமாகும் வகையில் மற்றொரு செய்தி வெளியாகி உள்ளது.

விஜய் லண்டன் பயணம்
லைகா புரொடக்ஷன் நிறுவனர் அல்லிராஜாவின் குடும்ப விழாவுக்காக இன்னும் சில நாட்களில் விஜய் லண்டன் செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கத்தி படக்குழு
அல்லிராஜாவின் தாயார் ஞானம் அம்மாளின் பிறந்தநாள் விழா விரைவில் லண்டனில் நடைபெறுகிறது. அந்தவிழாவில கலந்து கொள்ள விஜய், சமந்தா உள்ளிட்ட கத்தி படக்குழுவினர் அனைவருமே லண்டன் செல்கின்றனர்.

தனி விமானத்தில் பயணம்
இதற்காக அவர்களுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அடிபடுகிறது. லைகா நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஐங்கரன் மற்றும் முருகதாஸ் விளக்கம் கொடுத்தாலும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள்அதை ஏற்று கொள்ளவில்லை.

அதிகரிக்கும் சிக்கல்
இந்நிலையில் அவர்களது குடும்பவிழாவுக்கு விஜய் செல்ல இருப்பது பிரச்சனையை மீண்டும் ஊதிவிட்டதாகிவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் மத்தியிலும் இது கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











