2 வாரத்திலும் வசூல் வேட்டை.. 200 கோடி கிளப்பில் இணைந்த மாஸ்டர்.. தெறிக்கும் #MasterEnters200CrClub
சென்னை: பொங்கலை முன்னிட்டு வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 200 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக #MasterEnters200CrClub என்ற ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.
எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
50 சதவீதம் இருக்கைகளுடன் வெளியான மாஸ்டர் திரைப்படம் 2 வாரங்களில் 200 கோடி வசூலை ஈட்டி சரித்திர சாதனை படைத்துள்ளது.

100 சதவீதம் கொடுத்திருந்தால்
100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கக் கோரி நடிகர் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டது. 100 சதவீதம் கொடுத்திருந்தால், ஒரு வாரத்திலேயே இந்த ரெக்கார்டை மாஸ்டர் செய்திருக்கும் என்கிறார்கள்.

200 கோடி கிளப்
மாஸ்டர் திரைப்படம் இந்தியாவில் 150 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளதாகவும் உலகளவில் 200 கோடி வசூலை ஈட்டி 200 கோடி கிளப்பில் மாஸ்டர் திரைப்படம் இணைந்துள்ளதாக தளபதி ரசிகர்கள் தற்போது ட்விட்டர் பக்கத்தில் ஹாஷ்டேக் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

கமர்ஷியல் வேட்டை
நடிகர் விஜய்யின் படங்கள் எப்போதுமே கமர்ஷியல் வேட்டை படங்களாகவே இருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான். இந்த படத்தில் விஜய்யை வித்தியாசமாகவும், காட்டி கமர்ஷியல் வசூல் வேட்டை செய்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நெகட்டிவ் விமர்சனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி தியேட்டர்களில் மாஸ்டர் பட்டையை கிளப்பி வருகிறது.

2வது வாரத்திலும்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் முழுக்க விடுமுறையாக இருந்ததால், தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. ஆனால், பொங்கல் வாரம் முடிந்த நிலையிலும், இந்த வாரம் முழுக்கவே தியேட்டர்களில் தொடர்ந்து மக்கள் கூட்டம் மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க வருவதே இந்த வசூல் வேட்டைக்கு காரணம் என்கின்றனர்.

மீண்டும் வெளிச்சம்
இருட்டில் இருந்த தியேட்டர் தொழில் மீண்டும் மாஸ்டர் திரைப்படத்தால் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ஏகப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் தொடர்ந்து நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். மற்ற நடிகர்களும், தளபதி விஜய் போல தியேட்டர்களில் படங்களை வெளியிட முனைப்பு காட்ட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

4வது முறை
மெர்சல், சர்கார், பிகில் படங்களை தொடர்ந்து 4வது முறையாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 200 கோடி கிளப்பில் இணைந்துள்ள மகிழ்ச்சியை தளபதி ரசிகர்கள் #MasterEnters200CrClub என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரை தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர். சீக்கிரமே பிகில் படத்தின் 300 கோடி வசூலையும் மாஸ்டர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











