நாளைய தீர்ப்பு.. இன்றைய தீர்ப்பாக வந்துள்ளது.. எஸ்.ஏ.சி வீட்டில் கொண்டாட்டம்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதால், அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டில் விஜயின் உறவினர்கள் எல்லை இல்லா மகிழ்ச்சியில் உள்ளனர்.
தவெக தொடர்ந்து முன்னிலை: தமிழக வெற்றி கழகம் கட்சி சட்டமன்ற தேர்தலில் அதிரடியாக முன்னிலை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி மாபெரும் அரசியல் சவாலை ஏற்படுத்தியுள்ள இந்த கட்சி, ஆரம்ப கட்ட தபால் வாக்கு எண்ணிக்கையிலிருந்தே முன்னிலை பெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, தமிழக வெற்றி கழகம் 102 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் அதிமுக 71 தொகுதிகளிலும், திமுக 61 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய கட்சி தொடங்கி குறுகிய காலத்திலேயே பாரம்பரிய திராவிட கட்சிகளுக்கு சமமாகவும், சில இடங்களில் அதற்கு மேற்பட்ட ஆதரவை தவெக பெற்று இருப்பது அரசியல் விமர்சகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொண்டர்கள் கொண்டாட்டம்: இந்நிலையில், விஜயின் தமிழக வெற்றக்கழகம் தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதாக தகவல்கள் வெளியானதையடுத்து, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடி மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். மேலும், மாநிலம் முழுவதும் கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். பல இடங்களில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்குமா என்ற எதிர்பார்ப்புடன் இந்த தேர்தல் முடிவுகளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். முன்னதாக எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று அதிகாலையே திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று முருகரை தரிசனம் செய்து சிறப்பு பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications