விஜய் நாளை எப்போது முதலமைச்சர் ஆகிறார் தெரியுமா?.. எல்லோரும் எதிர்பார்த்த அந்த நேரம் என்ன?
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக போகிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் உட்பட தவெகவினர் மொத்தம் 108 தொகுதிகள் வரை வென்றார்கள். விஜய் எப்படியும் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்துவிடுவார். எனவே 107 எம்.எல்.ஏக்கள் அவருக்கு இருக்கிறார்கள். பெரும்பான்மைக்கு தேவையான 11 எம்.எல்.ஏக்களில் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவை கொடுத்துவிட்டார்கள். இந்நிலையில் நாளை விஜய் பதவியேற்கவிருக்கும் நேரம் குறித்து தெரியவந்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் இந்த சட்டப்பேரவைத் தேர்தலின் மூலம் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையே புரட்டிப்போட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கட்சி ஆரம்பித்து சில வருடங்களில் சந்தித்த முதல் தேர்தலிலேயே 30 விழுக்காட்டுக்கும் மேலாக வாக்குகள் வாங்கியிருக்கிறது கட்சி. தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளான திமுகவையும், அதிமுகவையும் ஓரங்கட்டி அரியணையை பிடித்திருக்கிறது. இருப்பினும் பெரும்பான்மைக்கு இன்னும் பத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற சூழ்நிலை இருந்தது.

காங்கிரஸின் கரம்: எனவே அதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள் என பல கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது தவெக. இப்போதைக்கு காங்கிரஸ் முதல் கட்சியாக வந்து தன்னுடைய ஐந்து எம்.எல்.ஏக்களின் ஆதரவை கொடுத்திருக்கிறது. விரைவில் மற்ற கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் என்பதால் விஜய் ஆட்சியமைப்பதில் எந்த பெரிய பிரச்னையும் இருக்கப்போவதில்லை. அதேசமயம் ஐந்து வருடங்கள் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்வாரா அல்லது பாதியிலேயே பிரச்னை வந்து கலைக்கப்படுமா என்றும் தெரியவில்லை.
ஆளுநருடன் சந்திப்பு: தனக்கு மெஜாரிட்டி கிடைக்க தொடங்கியிருப்பதால் அடுத்தக்கட்ட நகர்வுகளை நம்பிக்கையோடு செய்ய ஆரம்பித்திருக்கிறது தவெக. நேற்று ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய வாக்குகள் மெஜாரிட்டியை குறிப்பிட்டிருந்தது. ஆளுநரோ எம்.எல்.ஏக்களின் மெஜாரிட்டியை காட்டும்படி அறிவுறுத்தினார். இப்போது அதுதொடர்பாக சாதகமான சூழல் நிலவுகிறது. எனவே இன்று தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது விஜய்யின் ட்ரெஸ் கோட் மாதிரியே ஆளுநரும் அணிந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
எப்போது பதவி ஏற்கிறார்?: இந்நிலையில் நாளை விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்கப்போகும் நேரம் குறித்து தெரியவந்திருக்கிறது. அதன்படி சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை காலை 11.30 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார். ஜோசப் விஜய் சந்திரசேகர் என்னும் நான் என அவர் சொல்வதை கேட்க தவெகவினர் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்கள். கண்டிப்பாக தங்கள் தளபதி நல்லாட்சி வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் இருக்கிறார்கள்.
யார் யாருக்கு அழைப்பு?: நாளைய பதவியேற்பு விழாவுக்கு விஜய் தரப்பிலிருந்தும் பலருக்கு அழைப்புகள் செல்ல தொடங்கியிருக்கிறதாம். கட்சி ஆரம்பித்ததிலிருந்து திமுகவையும், ஸ்டாலினையும் கடுமையாக எதிர்த்துவருகிறார் விஜய். எனவே நாளைய விழாவுக்கு திமுக தரப்புக்கு அழைப்பை விடுத்து நாகரீக அரசியலை விஜய் முன்னெடுப்பாரா மாட்டாரா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்திருக்கிறது. கண்டிப்பாக அழைப்பு செல்லும் என்றே அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். பார்ப்போம்..


Click it and Unblock the Notifications
