காஷ்மீரில் நாளை துவங்கும் தளபதி 67 படத்தின் சூட்டிங்.. தனி விமானத்தில் படக்குழு பயணம்!
சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படம் சர்வதேச அளவில் வசூல்மழை பொழிந்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே அவரது தளபதி 67 படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழு காஷ்மீருக்கு தனி விமானம் மூலம் பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் தனது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள், அதன் ரிலீஸ்கள் என தொடர்ந்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவரது பீஸ்ட் படம் ரிலீசான நிலையில், இந்த ஆண்டு பொங்கலையொட்டியே கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் அவரது வாரிசு படம் ரிலீசாகியுள்ளது.

வசூல்மழையில் வாரிசு படம்
இந்தப் படம் கடந்த சில தினங்களில் 300 கோடி ரூபாய் கலெக்ஷனை எட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பேமிலி ஆடியன்சை வெகுவாக ஈர்த்துள்ளது. மேலும் விஜய் படங்களுக்கேயுரிய, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களும் படத்தில் நிறைந்துள்ளன.

அடுத்த கொண்டாட்டம்
இந்நிலையில் இந்தப் படத்தின் கொண்டாட்டம் அடங்குவதற்குள் அடுத்ததாக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தளபதி 67 படத்தின் கொண்டாட்டத்திற்கு ரசிகர்கள் தயாராகியுள்ளனர். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் தயாரிப்பு தரப்பு மற்றும் லோகேஷ் கனகராஜிடம் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

தளபதி 67 படத்தின் அறிவிப்பு
இந்நிலையில் இன்றைய தினமும் படத்தின் அடுத்த அறிவிப்பு ரசிகர்களுக்கு காத்திருப்பதாக தயாரிப்பாளர் லலித்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். முன்னதாக படத்தின் டெஸ்ட் சூட் நடத்தப்பட்டு கொடைக்கானலில் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர் இணைந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

தளபதி 67 காஷ்மீர் பயணம்
இதையடுத்து படக்குழு இன்றைய தினம் காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு பயணமாகியுள்ளது. அங்கு தட்பவெப்ப நிலை சூட்டிங் நடத்த சாதகமாக உள்ளதா என்பது குறித்தும் முன்னதாக கேட்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் லோகேஷ், த்ரிஷா மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் தனி விமானம் மூலம் ஸ்ரீநகர் பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயணிகள் பட்டியலில் லோகேஷ்
மாறாக லோகேஷ் பயணம் செய்த விமானத்தின் பயணிகள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருப்பதையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். இதனிடையே நாளைய தினம் படத்தின் சூட்டிங் ஸ்ரீநகரில் துவங்கவுள்ளதாகவும் அங்கு சில தினங்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும் இந்த சூட்டிங்கில் சஞ்சய் தத் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் நடிகர்கள் லிஸ்ட்
நேற்றைய தினம் படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் வெளியாகின. இந்நிலையில், சில தினங்களில் படத்தின் நடிகர், நடிகைகளின் விவரங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் பிரம்மாண்டமான அளவில் படம் உருவாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











