'கடைசியில் எனக்கும் நாமம் போட்டுவிட்டார்கள்'.. தெறி தலைப்புக்கு உரிமை கோரும் புது இயக்குநர்!
சென்னை: தெறி படத்தின் தலைப்பு என்னுடையது என்று இளம் இயக்குநர் சதிஷ் குமார் தெறி படத்தின் சர்ச்சைக்கு திரி கிள்ளிப் போட்டிருக்கிறார்.
பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் விஜய் படத்தையும், பிரச்சினைகளையும் என்று கூறலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு விஜய் படத்திற்கும் பிரச்சினைகள் எழுகின்றன.
தலைவா,துப்பாக்கி, கத்தி, புலி என்று வரிசையாக அவரது படங்கள் தொடர்ந்து பிரச்சினைகளில் சிக்குகின்றன. அந்த வரிசையில் தற்போது தெறி படமும் இணைந்து இருக்கிறது.

விஜய் - அட்லீ
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 59 படத்திற்கு பெயர் வைப்பதில் ஆரம்பம் முதலே இழுபறி நீடித்து வந்தது. படத்திற்கு தாறுமாறு, காக்கி, சத்ரியன் ஐ.பி.எஸ் மற்றும் மூன்று முகம் என்று பல்வேறு தலைப்புகள் பரிசீலனை செய்யப்பட்டன.

காக்கி
விஜய் இந்தப் படத்தில் போலீசாக நடிப்பதால் முன்னதாக காக்கி என்ற பெயரை படக்குழுவினர் வைத்தனர். ஆனால் வாய்மை இயக்குநர் செந்தில்குமார் அந்தப் பெயரை பதிவு செய்து வைத்திருந்தார், இதனால் அந்தப் பெயர் கைவிடப்பட்டது.

தெறி
இந்நிலையில் பல்வேறு கட்ட பரிசீலனைகளுக்குப் பின்னர் இப்படத்திற்கு தெறி என்று தலைப்பு வைத்தனர். மேலும் விஜய்யின் அதிரடியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் வெளியிட்டனர். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. தலைப்பும், பர்ஸ்ட் லுக்கும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

பிரச்சினை ஆரம்பம்
இளம் இயக்குநர் சதீஷ் குமார் என்பவர் தெறி படத்தின் தலைப்புக்கு உரிமை கோரி புதிதாக ஒரு பிரச்சினையை உண்டு பண்ணியிருக்கிறார். வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான சதீஷ் செப்டம்பர் மாதம் 4 ம் தேதி தன்னுடைய முகநூல் பக்கத்தில் என்னுடைய முதல் படமான தெறி பற்றி அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் இது,அக்டோபர் முதல் ஷூட்டிங் தெறிக்கும் என்று பதிவிட்டிருக்கிறார்.
கேட்டால் கொடுத்திருப்பேன்
விஜய் படத்தின் தலைப்பு தெறி என்று படக்குழுவினர் அறிவித்த நிலையில் "3 மாசத்துக்கு முன்னால நான் யோசிச்சி வைச்ச தலைப்பிது. பெயர் எல்லாம் முறைப்படி பதிவு செய்தும் ரிஜிஸ்டர் புத்தகம் அவர்கள் வசம் இருக்கிறது என்பதற்காக பெயரை தாங்கள் பதிவு செய்த மாதிரி மாற்றிக் கொண்டுள்ளனர். இதற்காக நான் அவர்களிடம் சண்டை போடப்போவதில்லை, ஆனால் கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

காரசாரமான விவாதம்
தற்போது இணையத்தில் இது தொடர்பாக காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சமூக வலைதளங்களில் பலரும் இளம் இயக்குநர் சதீஷ் குமாருக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மறுபடியும் முதல்ல இருந்து படிங்க பிரிக்க முடியாதது விஜய் படத்தையும், பிரச்சினைகளையும்!


Click it and Unblock the Notifications











