வேட்பு மனுவில் விஜய் குறிப்பிடாத சொத்து விவரம்.. பிரசாரத்தில் போட்டு உடைத்த நடிகர் ராஜு ஜெயமோகன்
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு திரை துறையில் இருந்து சிலர் ஆதரவு சிலர் எதிர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவரான நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான ராஜு ஜெயமோகன் தவெக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் விஜய் குறித்து பேசுகையில் தெரிவித்த விஷயம், விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதேபோல் எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் நிராகரிக்கப்பட்டதால் அந்த தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளித்துள்ளது.
தமிழ்நாடு அரசியல் களத்தில் குறிப்பாக தேர்தல் களத்தில் நடிகர் விஜயின் வருகை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் தளத்தில் பேச்சுக்கள் பலமாகவே அடிபடுகிறது. அதிலும் குறிப்பாக விஜய் திமுக எதிர்ப்பு வாக்குகள், தனது ரசிகர்களின் வாக்குகள், அதிமுக, பாஜக எதிர்ப்பு வாக்குகள் உள்ளிட்ட வாக்குகளை பெருமளவில் கவர்கிறார் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். பெரும்பாலான இடங்களில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் சுமார் 15 லிருந்து 20% வாக்குகளை பெற்று மூன்றாவது இடம் பெறுவார்கள் என்று கருத்துக் கணிப்பில் தெரிவித்து வருகின்றனர்.

ராஜு ஜெயமோகன்: நடிகர் விஜய்க்கு ஆதரவாக திரைத்துறையில் இருந்து பலரும் ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான ராஜு ஜெயமோகன் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கையில் விஜய் குறித்து தெரிவித்த விஷயம் பலரது கவனத்தை ஈர்த்தது.
அசைக்க முடியாத சொத்து: அதாவது வேட்பு மனு தாக்கல் செய்யும் போது விஜய் அவருடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து விவரங்களை தாக்கல் செய்தார். ஆனால் அவர் தாக்கல் செய்யாத ஒரு சொத்து என்று இருக்கிறது என்றால் அது எப்போதும் அவரை விட்டு விலகாத அசைக்க முடியாத சொத்தான ரசிகர்கள் தான். அதை தமிழ்நாட்டிற்கும் விஜய்க்கும் நாம் காட்ட வேண்டும் என்று பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருவதுடன் விஜய் ரசிகர்கள் பலரும் விஜய் போலவே இவரும் நன்றாக பஞ்ச் பேசுகிறாரே என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications