மீண்டும் லீக்கானது வாரிசு படத்தின் டூயட் கிளிக்.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!
விசாகப்பட்டினம் : நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படம் சிறப்பான எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
எந்தப் படத்திலும் இல்லாத சோதனையாக இந்தப் படம் துவங்கியதில் இருந்தே படத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையதளங்களில் லீக்காகி வருகின்றன.

விஜய்யின் பீஸ்ட் படம்
நடிகர் விஜய்யின் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது பீஸ்ட். மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் இந்த சூட்டிங் நடந்து முடிந்தது. தொடர்ந்து போஸ்டர்கள், ட்ரெயிலர், பாடல்கள் என எல்லாமே விஜய் படத்திற்கான அம்சங்களுடன்தான் வெளியாகி வைரலாகின. ரசிகர்கள் இந்தப் படத்தின் அரபிக்குத்து, ஜாலிலோ ஜிம்கானா பாடல்களை கொண்டாடினர். அனிருத் இசையில் தீம் மியூசிக்கும் பட்டையை கிளப்பியது.

சொதப்பிய நெல்சன்
இந்நிலையில் படம் வெளியானதும் அதை மேள தாளம் மற்றும் பட்டாசுகளுடன் எதிர்கொண்டனர். மிகுந்த உற்சாகத்துடன் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கோலமாவு கோகிலா, டாக்டர் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்த நெல்சன், விஜய் படம் என்பதால் இந்தப் படத்தில் அதிக சிரத்தை எடுக்கிறேன் பேர்வழி என்று கோட்டை விட்டுவிட்டார்.

தளபதி 66 படம்
விளைவு கலவையான விமர்சனங்களையே படம் பெற்றது. ஆனாலும் விஜய் படம் என்பதால் வசூலில் சொதப்பவில்லை. வசூலை வைத்து பார்க்கும்போது வெற்றிப்படமாகவே அமைந்தது. இந்நிலையில், படம் ரிலீசாவதற்கு முன்னதாகவே தனது அடுத்தப்படமான தளபதி 66ல் இணைந்துவிட்டார் விஜய்.

வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு
தற்போது இந்தப் படத்திற்கு வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். விஜய் படங்களுக்கே உரிய ஆக்ஷன், காமெடியுடன் குடும்ப சென்டிமெண்டை பிரதானமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது.

பொங்கல் ரிலீஸ்
பொங்கல் ரிலீசை மையமாக வைத்து இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது விசாகப்பட்டினத்தில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் சீன்கள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளன.

லீக்காகும் படத்தின் காட்சிகள்
தற்போது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் சூட்டிங் துவங்கப்பட்டதில் இருந்தே பெரிய பிரச்சினையை சந்தித்து வருகிறது. படத்தின் காட்சிகள் பல அடுத்தடுத்து லீக்காகி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

அடுத்தடுத்த வீடியோக்கள் லீக்
சென்னையில் விஜய், ராஷ்மிகா, குஷ்பூ உள்ளிட்டவர்கள் இடம்பெற்ற காட்சிகள் லீக்கானது. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட போதிலும் காட்சிகள், வீடியோக்கள் தொடர்ந்து லீக்காகி வருகிறது. தற்போது விசாகப்பட்டினத்தில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டு காட்சிகளின் வீடியோக்கள் வெளியாகின.

டூயட் பாடல் காட்சிகள் லீக்
முதல் வீடியோவில் ஷாம் மற்றும் விஜய்யின் சண்டை காட்சிகளும், இரண்டாவது வீடியோவில் பிரபு, சரத்குமார் மற்றும் விஜய் இடம்பெற்ற மருத்துவமனை காட்சிகளும் வெளியாகின. இந்நிலையில் தற்போது மீண்டும் பாடலின் டூயட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சிவப்புநிற உடையில் விஜய் -ராஷ்மிகா
இந்தப் புகைப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் சிவப்பு நிற உடையில் டூயட் பாடி வருகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து படக்குழுவினர் மிகுந்த சிரத்தையுடன் தேடி வருகின்றனர். பாதுகாப்பு பலப்படுத்தப்படும் நிலையிலும் இதுபோன்ற லீக் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











