ரீ ரிலீஸில் தள்ளிப்போகும் தளபதி விஜய்யின் படம்.. அப்செட்டில் ரசிகர்கள்.. கலாய்க்கும் இணையவாசிகள்
சென்னை: தளபதி விஜய் தற்போது தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கும் இந்த படம் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகி கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான படம் சச்சின். இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில் படத்தின் ரி ரிலீஸ் தேதியில் மாற்றம் இருப்பதாக தகவல் உலா வருகிறது.
மறைந்த இயக்குநர் மகேந்திரன் மகன் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் உருவான படம் சச்சின். விஜய், ஜெனிலியா, வடிவேலு, தாடி பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளியான படம் சச்சின். விஜய் நடித்த படங்களிலேயே ரசிகர்களுக்கு ஃபீல் குட் எக்ஸ்பீரியன்ஸ் கொடுத்த படங்களில் சச்சினுக்கு என்றைக்கும் முன்னுரிமை உள்ளது, விஜய்யின் மற்ற படங்கள் பிடிக்காதவர்களுக்கு கூட இந்த படம் மிகவும் பிடிக்கும். காரணம் படத்தில் விஜய்க்கு என தனி மாஸ் டயலாக்குகள், காட்சிகளோ என எதுவும் இருக்காது. ஆனால் விஜய்யை நம்மில் ஒருவராக உணர வைத்த படம்.

விஜய்: தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் தொடங்கி பின்னணி இசை வரை அனைத்தும் ஹிட் அடித்தது. விஜய்யின் திரை வாழ்க்கையில் இந்த படம் மிகவும் முக்கியமான படம் எனக் கூறலாம். இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு ரி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார். அதுவும் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் ஒரு புது படம் ரிலீஸ் ஆவதை போல் ரீ ரிலீஸ் செய்ய தாணு முடிவு செய்துள்ளார். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
சச்சின்: அதன் அடிப்படையில் படத்தை வரும் மார்ச் 28ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால் இப்போது அந்த தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வருகிறது. குறிப்பாக, இந்த தேதியில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் பாகம் 2 படம் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தை படக்குழு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் 28ஆம் தேதி இந்த படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு விடும் என்பதால், சச்சின் படத்தின் ரீ ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளாராம் தாணு. மேலும் சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்யக் காரணம், விஜய் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்த என கூறப்படுகிறது.
ஏமாற்றம்: சச்சின் படத்தின் ரீ ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு இருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் கில்லி படம் ரீ ரிலீஸில் அதிக வசூலைக் குவித்த படமாக உள்ளது. காரணம் விஜய் ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடினார்கள். அதேபோல் சச்சின் படத்தைக் கொண்டாட காத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு, ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளதால் வருத்தத்தில் உள்ளார்கள். இதனால் விஜய்யை பிடிக்காத இணையவாசிகள் விஜய் ரசிகர்களை கலாய்த்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











