சூர்யாவை போட்டு பலமுறை அடிச்சிருக்கேன்.. மகளை ஒரு முறை கூட அடிச்சதில்லை.. விஜய் சேதுபதி பளிச்!
சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்கள் எந்த அளவுக்கு படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வந்தனரோ அதைவிட பொதுமக்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
பெண் குழந்தைகளை பெற்றவர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றும் நம்முடைய குழந்தைகளுக்கு நாம் தான் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை அழுத்தம் திருத்தமாக மகாராஜா திரைப்படம் கூறுவதாக பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தின் புரமோஷனுக்காக அளித்த பேட்டி ஒன்றில் தனது மகன் சூர்யா சேதுபதியை சில சமயங்களில் போட்டு அடிப்பேன் என வெளிப்படையாக கூறியுள்ளார்.
விஜய் சேதுபதியின் குடும்பம்: 46 வயதாகும் நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2003-ம் ஆண்டு ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதியினருக்கு சூர்யா என்கிற மகனும் ஸ்ரீஜா என்கிற மகளும் உள்ளனர். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி தற்போது புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மகனை அடிப்பேன்: விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடி தான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் சூர்யா சேதுபதி நடித்துள்ளார். தற்போது அப்பாவின் பெயரை பயன்படுத்த விரும்பாமல் சூர்யா என்கிற பெயருடன் தனியாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் எடுக்கும் சில முடிவுகளுக்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளேன். சில சமயங்களில் அவரை திட்டி உள்ளேன். சில நேரங்களில் அடித்து இருக்கிறேன். அடித்ததும் ஸாரி சொல்லி இருக்கிறேன். ஒரு குழந்தைக்கு தான் செய்வது தவறு என்று தெரியாமல் அந்த தவறை செய்கிறது. ஆனால் அது செய்வது தவறு என்பதை தெரிந்து நாம் அடிப்பது நம்மீது தானே தவறு. ஆனாலும், அந்த நேரத்தில் வரும் கோபம் காரணமாக அடித்து விடுகிறோம். பின்னர் நம் குழந்தைகளை அணைக்கிறோம் என விஜய் சேதுபதி வெளிப்படையாக கூறியுள்ளார்.

மகளை அடித்ததில்லை: மகனை கண்டித்து அடித்தது போல பெண் குழந்தையை கண்டித்து அடித்தது கிடையாது என விஜய் சேதுபதி கூறியுள்ளார். மேலும், தான் தயாரித்த படங்களிலேயே தனது மகள் ஸ்ரீஜாவுடன் நடித்த முகிழ் படம் மட்டுமே தனக்கு லாபத்தை கொடுத்தது என்றும் மற்ற படங்கள் மோசமான நஷ்டத்தையே கொடுத்து தன்னைக் கடனாளியாக மாற்றியது என்றும் விஜய் சேதுபதி தனது பேட்டியில் கூறியுள்ளார்.
நித்திலனின் 2வது பெரிய படம்: மகாராஜா திரைப்படம் என்னுடைய 50வது படம் என கொண்டாடப்படுவதை விட நித்திலனின் 2வது பெரிய படம் என்று தான் கொண்டாட வேண்டும். அந்தளவுக்கு அடைகாத்து தனது படத்தை கச்சிதமாக அவர் நினைத்ததை போலவே திரையில் காட்டியிருப்பதால் தான் ரசிகர்கள் தற்போது அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என விஜய் சேதுபதி கூறியுள்ளார். நித்திலன் மிகப்பெரிய இயக்குநராக வருவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்றும் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











