ரொம்ப கஷ்டம்.. சரியான பாரமா இருக்கும்.. மகனுக்கு அட்வைஸ் செய்த விஜய் சேதுபதி
சென்னை: கோலிவுட், பாலிவுட் என கலக்கிவரும் விஜய் சேதுபதி கடைசியாக மகாராஜா படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் அவரது 50 ஆவது படமாகும். நித்திலன் இயக்கியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து நல்ல வசூலை பெற்றுவருகிறது. இதற்கிடையே விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் ஃபீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் அவர் கலக்கிவருகிறார். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் தமிழ் சினிமாவில் தலைக்காட்டிக்கொண்டிருந்த அவர்; தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் கலக்கினார். அதன் பலனாக கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட்டுக்கும் சென்று தனது வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறார். பாலிவுட்டில் அவர் நடித்த ஃபர்ஸி வெப் சீரிஸ், மெரி கிறிஸ்துமஸ், ஜவான் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

மகாராஜா: தொடர்ந்து வில்லனாகவே நடித்துவந்ததால் அவர் ஹீரோ என்பதையே மறந்துவிட்டாரா என்று அவரது ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் அவர்களது கவலையை போக்கும் விதமாக மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படம் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போடுகிறது.
மகன் ஹீரோ: இந்தப் படம் தவிர்த்து மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்திலும் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இதற்கிடையே அவரது மகன் சூர்யாவும் ஹீரோவாக அறிமுகமாகிறார். சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கும் ஃபீனிக்ஸ் படத்தில்தான் அவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதுதொடர்பான அறிவிப்பு வந்தபோது பலரும் ஆச்சரியப்பட்டார்கள். மேலும் சூர்யாவின் பேச்சை வைத்து பலரும் விமர்சிக்கவும் செய்தார். இந்தச் சூழலில் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர், விஜய் சேதுபதி கலந்துகொண்டனர்.
விஜய் சேதுபதி பேச்சு: விழாவில் பேசிய விஜய் சேதுபதி, "திட்டமிடாமல்தான் இதெல்லாம் நடந்தது. நானும், அனல் அரசும் ஒரு பயணத்தில் பழைய நினைவுகளை பேசிக்கொண்டு வந்தோம். அனல் அரசு எனது மகனிடம் கதை சொல்லி இந்தப் படத்துக்கு அவர் சரியாக இருப்பார் என்று கூறினார். சூர்யாவிடம் கேளுங்கள் அவனுக்கு சரி என்றால் எனக்கும் சரிதான் என்று அனலிடம் நான் சொன்னேன்.
ரொம்ப கஷ்டம்: அவன் ஹீரோவாவான் என்று நான் துளியும் கற்பனை செய்யவில்லை. எனது பையன் இந்தத் துறைக்கு வரும்போது, 'இங்கு சர்வைவ் ஆவது ரொம்ப கஷ்டம்' என்றுதான் கூறினேன். ஏனெனில் நான் இங்கு சர்வைவ் பண்ண எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது நான் சொல்லி அவனுக்கு தெரியும். இதில் ஒவ்வொருமுறையும் நிறைய அழுத்தங்களை எதிர்கொள்கின்றோம். எனது மகனுக்கு இந்தத் துறையில் எவ்வளவு பாரம் இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவனுக்கு இதுதான் பிடித்திருந்தது. இந்த டீசரை பார்த்து உண்மையில் நான் மகிழ்ந்தேன். சூர்யா பிறந்து 19ஆவது தந்தையர் தினத்தை கொண்டாடியுள்ளேன். இதுதான் எனது மிகச்சிறந்த தந்தையர் தினம்" என்றார்.
நிகழ்ச்சி முடிந்ததும் சூர்யாவிடம், விஜய் சேதுபதி இப்போது மட்டும் எதற்காக வந்தார் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சூர்யா, இன்று தந்தையர் தினம் அதனால்தான் அழைத்து வந்தேன் என்று பதிலளித்தார். முன்னதாக இந்தப் படத்தின் அறிமுக விழாவில் பேசிய சூர்யா, 'அப்பா வேற நான் வேற' என்று சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











