புருஷன் பெயரை சொல்லக் கூடாது.. போடா லூசு.. விஜய் சேதுபதி கன்னத்திலே அறைவிட்ட நித்யா மேனன்!
சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவன் தலைவி' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. கணவன் - மனைவி பிரிவு கதைகள் சமீப காலமாக சினிமா பிரபலங்கள் மத்தியில் அதிகம் பரவி வரும் நிலையில், அதை மையமாக வைத்து இயக்குநர்களும் இஷ்டத்துக்கு படங்களை எடுத்து தள்ளி வருகின்றனர்.
இந்த ஆண்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை படத்திலும் திருமண சிக்கல் குறித்து தான் பேசியிருப்பார்கள். அந்த படத்திலும், நித்யா மேனன் நடித்திருப்பார். திருமணத்துக்கு முன்பாகவும் திருமணம் ஆன புதிதிலும் ஆணும் பெண்ணும் எப்படி பழகுவார்கள். திருமணத்துக்குப் பிறகு அவர்கள் எலியும் பூனையுமாக எப்படி மாறுவார்கள் என்பதை அந்த காலத்தில் இருந்து பல படங்கள் காட்டியுள்ள நிலையில், அப்படியொரு கதையில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஜோடி போட்டு நடித்துள்ளனர்.

கடைசியாக சூர்யா, பிரியங்கா மோகனை வைத்து பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் படம் சறுக்கிய நிலையில், இந்த முறை கண்டிப்பாக வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என அவர் போட்டுள்ள உழைப்பு டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. குடும்பஸ்தன் படத்தைத் தொடர்ந்து தியேட்டரில் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்துப் பார்க்கும் படமாக தலைவன் தலைவி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நித்யா மேனன் தான் டாப்: விஜய் சேதுபதியை விட ஒவ்வொரு ஃபிரேமிலும் செமையாக ஸ்கோர் செய்வது நித்யா மேனன் தான். நடிப்பு பேரரசியாகவே தேசிய விருது வென்ற நித்யா மேனன் தலைவன் தலைவி படத்தை தாங்கி பிடிக்கிறார். திருமணம் ஆன சமயத்தில் கணவன் பெயரை கூட சொல்லமாட்டேன் என சொல்லும் அவர், சில ஆண்டுகளுக்குப் பிறகு போடா லூசு என சொல்லும் காட்சிகள் எல்லாம் காமெடி ரகளை. மேலும், எங்களை பிரிச்சு விட்ருங்க என சொல்வதும், விஜய் சேதுபதி கன்னத்திலேயே ஓங்கி அறைவிடும் காட்சிகள் என டிரைலர் முழுவதும் அலப்பறை தான்.
பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி: பொண்ணு பார்க்கும் போது விஜய் சேதுபதி மாஸ்டர் என சொன்னதும் வாத்தியார்னு சொல்லவே இல்லையே என பெண் வீட்டார் கேட்கும் போது, இல்லைங்க பரோட்டோ மாஸ்டர் என சித்தப்பு சரவணன் சொல்லும் காட்சியும் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தும். யோகி பாபு, தீபா, ஆர்.கே. சுரேஷ், ரோஷினி ஹரிப்பிரியன் என ஏகப்பட்ட நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். அரசி எனும் பெயரை பேரரசி என மாற்றிக் கொண்டு உன்னை எப்படி பார்த்துக்குறேன் பாரு என ஆரம்பத்தில் தலை வாழை இலையில் ஸ்வீட்டால் அணைகட்டி முழு பந்தி சோறு போட்டு காதலிக்கும் விஜய் சேதுபதி காலப்போக்கில் கணவன் - மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் இருவரும் ஒருவரையொருவர் பிரிய முடிவெடுப்பதும், மீண்டும் சேர்ந்து வாழ போராடுவதுமாக குடும்ப சிக்கலை காமெடி கலந்த கிராமத்துப் படமாக கொடுத்திருக்கிறார் பாண்டிராஜ்.
ஹிட் கன்ஃபார்ம்: விஜய் சேதுபதி கடைசியாக நடித்து வெளியான ஏஸ் திரைப்படம் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. இந்த ஆண்டு ரவி மோகன் உடன் இணைந்து நித்யா மேனன் நடித்த காதலிக்க நேரமில்லை படமும் கல்லா கட்டவில்லை. இந்நிலையில், இருவருக்கும் மிகப்பெரிய வெற்றிப் படமாக தலைவன் தலைவி அமையும் என்றே தெரிகிறது. வரும் ஜூலை 25ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











